குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டிய சர்வதேச எல்லைப் பகுதியை இரவு நேரத்தில் கண்காணிப்பதற்காக நிறுவப்பட்ட 2,061மின் கோபுரங்களில் தற்போது 616 மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
மத்திய பொதுப்பணித்துறையுடன் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துறை ரீதியான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்த தகவலை எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் தொடர்பாக வழக்கமாக எழுதப்படும் குறிப்புகளில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
புது தில்லியில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ரஞ்சித் காந்த் மிஸ்ரா, பொதுப்பணித்துறையின் இயக்குநர் பிரபாகர் சிங் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எல்லைப் பகுதிகளில் மொத்தம் 82 ஜெனரேட்டர்கள் இருப்பதாகவும், அதில் 38 மட்டுமே செயல்பாட்டில் உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச எல்லைப் பகுதிகளில் வீரர்களின் அன்றாடக் கடமைகள் பாதிக்கப்பட்டிருப்பதாவும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் எல்லை என்பது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி 1,225 கி.மீ. அளவுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டி 1,037 கி.மீ. தொலைவுக்கும் அமைந்திருக்கிறது.
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தை ஒட்டி 503 கி.மீ. அளவுக்கும், குஜராத் மாநிலத்தை ஒட்டி 508 கி.மீ. தொலைவுக்கும் உள்ளது.
இதில் குஜராத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் 616 மின் கோபுரங்களும், 38 ஜெனரேட்டர்களும் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. செயல்படாமல் உள்ள பிற மின் கோபரங்களையும், ஜெனரேட்டர்களையும் உடனடியாக சீரமைத்து தருமாறு பொதுப்பணித்துறையிடம் எல்லைப் பாதுகாப்பு படை கோரிக்கை விடுத்திருப்பதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், பூஜ் மற்றும் காந்தி நகர் பகுதிகளை ஒட்டிய எல்லையில் மின் கோபுரங்களையும், ஜெனரேட்டர்களையும் சீரமைக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும், அப்பணிகள் முடிந்தவுடன் எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்ததாக குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளிலும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ எத்தனிக்கும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை வெவ்வேறு சமயங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









