சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: தில்லி நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் சரண் 

தில்லியில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சஜ்ஜன் குமார் தில்லி நீதிமன்றத்தில்  சரணடைந்தார். 
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: தில்லி நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் சரண் 

புது தில்லி: தில்லியில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சஜ்ஜன் குமார் தில்லி நீதிமன்றத்தில்  சரணடைந்தார். 

தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ஆம் ஆண்டு மூண்ட கலவரம் தொடர்பான வழக்கில், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு மீது உயர்நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், குடும்ப விவகாரத்தில் சில முடிவுகளை எடுக்கவும், நீதிமன்றத்தில் சரணடைவதற்கு ஜனவரி மாதம் 30ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்க வேண்டும் என சஜ்ஜன் குமார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அவர் நிச்சயம் சரணடைய வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் சார்பில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடந்த 22ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி மாதம் 2ஆம் தேதிக்கு பிறகே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. 

இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில், சஜ்ஜன் குமார் தில்லி நீதிமன்றத்தில் திங்களன்று சரணடைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com