பக்கோடா விற்பது அவமானம் அல்ல!: எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமித் ஷா பதிலடி

பக்கோடா விற்பதுகூட ஒருவிதமான வேலைவாய்ப்புதான் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்,
பக்கோடா விற்பது அவமானம் அல்ல!: எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமித் ஷா பதிலடி
Updated on
2 min read

பக்கோடா விற்பதுகூட ஒருவிதமான வேலைவாய்ப்புதான் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதற்கு பாஜக தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் திங்கள்கிழமை இதுதொடர்பாக பேசிய அவர், பக்கோடா விற்பது ஒன்றும் தேசத்தில் அவமானமான நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, வேலைவாய்ப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். ஒருவர் சிறிய கடையை அமைத்து பக்கோடா விற்பது கூட வேலைவாய்ப்புதான் என்றும் அதன் மூலம் அவர் ஈட்டும் வருமானத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இதுகுறித்து கூறுகையில், 'பிரதமரின் கூற்றுப்படி பார்த்தால் பிச்சை எடுப்பதுகூட ஒரு வேலைவாய்ப்புதான்' என்றார். மேலும், மத்திய பாஜக அரசுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்படி எனத் தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இந்தச் சூழலில், மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதன்முறையாக அவையில் திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துகளை அவர் தெரிவித்தார். அவையில் அமித் ஷா பேசியதாவது:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எண்ணிலடங்காத மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 31 கோடி ஏழை மக்களுக்கு இலவச வங்கிக் கணக்குகளைத் தொடங்கியது; பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியது; நலிவுற்ற மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது என எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, 16,000 கிராமங்களுக்கு மின் இணைப்புகளும், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி வரியை கப்பார் சிங் வரி என்றும், வழிப்பறி என்றும் காங்கிரஸார் விமர்சிக்கின்றனர். சட்டப்பூர்வமாக மக்களிடம் வரி வசூலிப்பதற்குப் பெயர் வழிப்பறியா? இதுதான் ஜிஎஸ்டி பற்றி காங்கிரஸார் கொண்டுள்ள புரிதலா?. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜிஎஸ்டி சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்த போது அதை பாஜக எதிர்த்ததாகக் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல். அப்போது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஜிஎஸ்டி சட்டத்தை அமலாக்குவதற்காக முன்னெடுத்த சில தவறான நடவடிக்கைகளையே நாங்கள் எதிர்த்தோம்.
அடுத்ததாக, அண்மையில் பிரதமர் மோடி தெரிவித்த ஒரு கருத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். வேலையே இல்லாமல் இருப்பதை விட ஒரு தொழிலைச் செய்து வருமானம் ஈட்டுவது தவறில்லை. அவ்வாறு சுயமாகத் தொழில் புரிவோரை பிச்சை எடுப்பவர்களுடன் எவ்வாறு ஒப்பிட முடியும்?
தேநீர் விற்றவர்தான் இன்றைக்கு நாட்டின் பிரதமராக உயர்ந்திருக்கிறார். எனவே, உழைத்து பொருள் ஈட்டும் எந்தத் தொழிலும் இழிவானது அல்ல. அந்த வகையில் பக்கோடா விற்பது அவமானமான செயல் அல்ல என்றார் அமித் ஷா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com