வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தண்டனை பெற்றவர்கள் கட்சிகளை நடத்துவது எப்படி?: உச்ச நீதிமன்றம் கேள்வி

குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருநபர் ஒரு கட்சியின் நிர்வாகியாக எப்படி இருக்க முடிகிறது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:21 pm

DIN

குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருநபர் ஒரு கட்சியின் நிர்வாகியாக எப்படி இருக்க முடிகிறது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்குகளில் தண்டனை விதிக்ப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு கோரி வழக்குரைஞரும் பாஜக பிரமுகருமான அஸ்வினி கே.உபாத்யாய ஒரு பொது நல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகளை உருவாக்கவும் அக்கட்சிகளின் நிர்வாகிகளாக செயல்படவும் தடை விதிக்குமாறு அவர் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மனு மேற்கண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அஸ்வினி உபாத்யாய சார்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில் "தற்போதுள்ள சட்டதிட்டங்களின்படி அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் அந்த அமைப்பிடம் இல்லை. தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்ட, தண்டனை பெற்ற நபர்கள் இன்னமும் அரசியல் கட்சிகளை நடத்தவும், கட்சிப் பதவிகளை வகிக்கவும் முடிகிறது. மக்கள் பிரதிநிதிகளாகும் வாய்ப்புள்ள வேட்பாளர்களை முடிவு செய்யவும் முடிகிறது' என்று தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருநபர் ஒரு கட்சியின் நிர்வாகியாக எப்படி இருக்க முடிகிறது? அவரால் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்ய முடிகிறது? தேர்தல்களின் புனிதத்தன்மையில் இருந்து அரசியலில் உள்ள ஊழல் நீக்கப்பட வேண்டும் என்ற நமது தீர்ப்புகளுக்கு எதிராக இது உள்ளது. 
ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ள ஒருவர் கட்சி நிர்வாகி என்ற முறையில் தனது முகவர்கள் மூலம் மறைமுகமாக தேர்தலில் போட்டியிட முடிகிறது. தண்டனை பெற்ற நபர்கள் ஒரு பள்ளிக்கூடத்தை தொடங்குவதையோ, தான தர்மங்களைச் செய்வதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அத்தகைய நபர்கள் அரசியல் கட்சியைத் தொடங்கி மற்றவர்கள் மூலம் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதுதான் கேள்வி. தேர்தல் நடைமுறைகளில் தூய்மை என்ற அம்சத்துக்கு இது மிகப் பெரிய அடியாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கூறுகையில் "இந்த விவகாரம் தொடர்பாக நான் பதில் மனு தாக்கல் செய்ய இரு வார அவகாசம் தேவை' என்று தெரிவித்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.