வறுமையினால் கர்நாடக மருத்துவமனையில் தத்து கொடுக்கப்பட்டவர்....ஸ்விட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆன கதை!  

தாயின் வறுமை நிலை காரணமாக கர்நாடக மாநிலம் உடுப்பி மருத்துவமனை ஒன்றில் தத்து கொடுக்கப்பட்டவர், ஸ்விட்சர்லாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினர் ஆன சுவாரஸ்ய கதை தெரிய வந்துள்ளது. 
வறுமையினால் கர்நாடக மருத்துவமனையில் தத்து கொடுக்கப்பட்டவர்....ஸ்விட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆன கதை!  
Published on
Updated on
2 min read

புதுதில்லி: தாயின் வறுமை நிலை காரணமாக கர்நாடக மாநிலம் உடுப்பி மருத்துவமனை ஒன்றில் தத்து கொடுக்கப்பட்டவர், ஸ்விட்சர்லாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினர் ஆன சுவாரஸ்ய கதை தெரிய வந்துள்ளது. 

தில்லியில் கடந்த வாரம் இந்திய வம்சாவழி அயலக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினரான நிக்லஸ் சாமுவேல் குகெர்  கலந்து கொண்டார். அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டதோடு அவருக்கு இந்தியாவுடன் உள்ள மற்றொரு உணர்ச்சிபூர்வமான பந்தம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் 'பேசேல் மிஷன்' என்னும் கிறிஸ்துவ சேவை நிறுவனமானது, 'சிஎஸ்ஐ லம்பார்ட் நினைவு மருத்துவமனை' என்னும் பெயரில் சேவை மருத்துவமனை ஒன்றினை நடத்தி வந்தது. இந்த மருத்துவமனையில் 01.05.1970 அன்று அனுசுயா என்னும் ஏழைத் தாய்க்கு மகனாக அவர் பிறந்துள்ளார்.

தனது ஏழ்மை நிலையின் காரணமாக பிறந்த குழந்தையினை வேறு யாருக்கேனும் தத்துக்கொடுத்து விடுமாறு அனுசுயா அங்கிருந்த மருத்துவர் ப்லக்பில்டரிடம்  கேட்டுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக குழந்தைக்கு நல்ல கல்வியும் வளர்ப்பும் கிடைக்கும் என்று அவர் கருதினார். அவர் உடனடியாக ஸ்விட்சர்லாந்தினைச் சேர்ந்தவர்களும், அப்பொழுது கேரளாவில் பணியாற்றி வந்தவர்களுமான பிரிட்ஸ் குகெர் - எலிசபெத் குகெர் தம்பதியினருக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் பிறந்து 15 நாட்களில் குழந்தை நிக்லஸை அவனது புதிய பெற்றோர் கேரளாவின் தளசேரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எலிசபெத் குகெர் ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியராகவும், பிரிட்ஸ் குகெர் இயந்திர வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தனர்.

நான்கு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாடான ஸ்விட்சர்லாந்து திரும்பினார். பிரிட்ஸ் குகெர் - எலிசபெத் குகெர் தம்பதியினர் பெரிய பொருளாதார வசதிகள் இல்லாதவர்கள் என்பதால், நிக்லசுக்கு அவர்களால் மேற்படிப்புக்கு உதவ முடியவில்லை.

எனவே நிக்லஸ் ட்ரக் ஓட்டுநர், தோட்ட வேலை செய்பவர் மற்றும் மெக்கானிக் ஆகிய வேலைகளைச் செய்து தனது மேல்படிப்பினை கவனித்துக் கொண்டார். படிப்பினை முடித்த பின்னர், அவர் பணத் தேவைகளுக்கான இதர வேலைகளுடன் சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். 

2002-ஆம் ஆண்டு அவர் ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜூரிச்சுக்கு வடமேற்கு பகுதியில், ஜெர்மன் நாட்டு  எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வின்டெர்த்தூர் நகரில் நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு பதவிகளை வகித்த அவர், 2017-ஆம் ஆண்டு அந்நாட்டின் சிறுபான்மையினருக்கான கட்சிகளில் ஒன்றான 'ஏவாஞ்செலிக்கல் மக்கள் கட்சி' சார்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் நிக்லஸ் ஸ்விட்சர்லாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பினை பெறுகிறார்.

இவ்வாறு வறுமை நிலை காரணமாக கர்நாடக மாநிலம் உடுப்பி மருத்துவனை ஒன்றில் தத்து கொடுக்கப்பட்ட ஒரு ஏழைக் குழந்தை, ஸ்விட்சர்லாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினராக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த தகவல்களை எல்லாம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நிக்லஸ் சாமுவேல் குகெர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் , 'தான் இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்து  ஆகிய இரு நாடுகளின் சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும் அவர் இரு நாட்டு அரசாங்கங்களின் ஆதரவுடன் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தினை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தன்னைப் பெற்ற தயாரான அனுசுயாவினை  கண்டு பிடிக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ள அவர், தனது மகளுக்கு அனுசுயா என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com