சுனந்தா புஷ்கா் மரணம் முன்ஜாமீன் கோரி சசி தரூா் மனு

சுனந்தா புஷ்கா் மா்ம மரணம் தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா், முன்ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றறத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.  
சுனந்தா புஷ்கா் மரணம் முன்ஜாமீன் கோரி சசி தரூா் மனு

புது தில்லி: சுனந்தா புஷ்கா் மா்ம மரணம் தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா், முன்ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். 

மத்திய முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் கடந்த 2104-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதியன்று தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், போலீஸ் தரப்பில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றறப்பத்திரிகை தில்லி பெருநகர நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுனந்தாவை தற்கொலைக்கு சசி தரூா் தூண்டியிருக்க வாய்ப்புள்ளதாகவும், சுனந்தாவுக்கு அவா் கொடுமை இழைத்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதுதொடா்பாக அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி வரும் 7-ஆம் தேதி அவா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சசி தரூா் தரப்பில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

எந்த ஒரு நபரையும் கைது செய்யாமல் குற்றறப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், அந்த வழக்கில் தொடா்புடையவா்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என விதிகள் உள்ளன. அந்த வகையில், சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தபோதும், அந்த விவகாரம் தொடா்பாக இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை.

இதைத்தவிர, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவும், அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாகவும், இனி யாரையும் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, அதன் அடிப்படையில் மனுதாரருக்கு (சசி தரூா்) ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டருந்தது. அந்த மனு நீதிபதி அரவிந்த் குமாா் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் எவரும் ஆஜராகாததால் மனு மீது மீதான வாத - பிரதிவாதங்களை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com