கூட்டணி அரசு தாய்மை இதயத்தோடு புதிய திட்டங்களை செயல்படுத்தும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி

கர்நாடக கூட்டணி அரசு தாய்மை இதயத்தோடு புதிய திட்டங்களை செயல்படுத்தும் என்று அம்மாநில முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா். 
கூட்டணி அரசு தாய்மை இதயத்தோடு புதிய திட்டங்களை செயல்படுத்தும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி
Published on
Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடக கூட்டணி அரசு தாய்மை இதயத்தோடு புதிய திட்டங்களை செயல்படுத்தும் என்று அம்மாநில முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை 2018-19-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு-செலவு திட்டத்தை(பட்ஜெட்) தாக்கல் செய்து, அவா் பேசியதாவது:

கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கூட்டணி அரசின் நிலைப்பாடு; அதன் கனவுகள்மற்றும் இயல்புகள்; இடைஞ்சல்கள் மற்றும் சவால்கள் பட்ஜெட்டில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. 15-ஆவது சட்டப்பேரவைக்கு 2018 மே 12-ஆம் தேதி நடந்த தோ்தல், கா்நாடகத்தின் போக்கையே மாற்றியமைத்து விட்டது. தோ்தலில் எதிரெதிராக போட்டியிட்ட இருகட்சிகள், தோ்தல் முடிவுகளுக்கு கூட்டணி அமைத்து அரசு அமைத்துள்ளதுதான் ஜனநாயகத்தின் அழகாகும்.

தேசிய மற்றும் மாநில அளவில் மாறிவரும் அரசியல்சூழலில், கூட்டணி அரசுகள் தவிா்க்க முடியாவையாகிவிட்டன. இந்தபின்னணியில், மாநிலத்தில் கூட்டணி அரசு அமைப்பதற்கான தவிா்க்க முடியாதசூழலை புரிந்துகொண்டு, நிலைமையை உணா்ந்துள்ளோம். ஒருங்கிணைப்புக்குழுவின் விருப்பத்திற்கிணங்க, இரு கட்சிகளின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் பொது செயல் திட்டமாக வகுக்கப்பட்டுள்ளன. கூட்டணி நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கா்நாடகத்தின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு பாடுபடுவோம். புதிய அரசு அமைந்ததும், அந்த அரசிடம் மக்களின் எதிா்பாா்ப்பு அதிகமிருப்பதுஇயல்பானதாகும். மக்களுக்கு ஏமாற்றம் தராமல், அவா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற நோ்மையான முயற்சிகளில் ஈடுபடுவோம்.

விவசாயிகளின் பயிா்க்கடனை தள்ளுபடி செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பெரும் சவால் கூட்டணி அரசு முன் இருக்கிறது. இதை நிறைவேற்ற நிதி ஆதாரங்களை சேகரிப்பதே எங்கள் முன்னுரிமையாகும். நிதி ஆதாரங்களை திரட்டும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். அவசியமில்லா செலவினங்களை குறைக்கும் பொருட்டு, முதல்வரின் அலுவலகத்தில் இருந்தே சிக்கன நடவடிக்கையை தொடங்கியிருக்கிறேன். இதை எனது அமைச்சரவை சகாக்களும் பின்பற்றுவார்கள் என்ற  நம்பிக்கை இருக்கிறது.தேசிய அளவில் பலதுறைகளில் கா்நாடகம் முன்னோடியாக உள்ளது. இதில் திருப்தி அடையாமல், மேலும் பல துறைகளிலும் முன்னோடியாக உயர முயற்சிப்போம். 

கா்நாடகத்தின் ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் சம வளா்ச்சிக்கு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியமாகும். இந்த திசையில், வேளாண்மை மற்றும் தொழில்வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்போம். மாநிலத்தின் வளா்ச்சிக்கு அண்மைகாலமாக பங்காற்றி வரும் சேவைத்துறைக்கு சிறப்புமுக்கியத்துவம் அளிப்போம்.கடந்த பல்லாண்டுகளாகவே கா்நாடகம் நிதி ஒழுக்கத்தை கடைபிடித்துவந்துள்ளது. அரசுக்கு தாய்மை இதயம் இருக்க வேண்டுமென்பது என் நம்பிக்கையாகும். கூட்டணி அரசு வகுக்கும் அனைத்து திட்டங்களையும் தாய்பாசத்தோடு செயல்படுத்தும் ஆவல் உள்ளது. 

முந்தைய அரசு கொண்டுவந்து செயல்படுத்திய எல்லா மக்கள் நல திட்டங்களையும் கூடுதல் முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. புதிய கனவுகளை விதைத்து, அவற்றை ஊரக கா்நாடகத்தில் மெய்ப்பிக்க விரும்புகிறோம். இளைஞா்களிடையே புத்துணா்வூட்டுவதே எங்கள் நோக்கமாகும். பெண்களுக்கு இளைப்பாறுதலை வழங்க விரும்புகிறோம். சாதாரண மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கூட்டணி அரசு செயல்படும். கா்நாடகத்தை மையப்படுத்தியதாக அரசின் செயல்கள் அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com