புதுச்சேரி பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது ஏன்?: ஆட்சியாளா்கள் விளக்குமாறு கிரண்பேடி வேண்டுகோள்

புதுவை பேரவைக்கூட்டத்தொடா் முன்கூட்டியே முடிக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் ஆட்சியாளா்கள் விளக்க வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். 
புதுச்சேரி பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது ஏன்?: ஆட்சியாளா்கள் விளக்குமாறு கிரண்பேடி வேண்டுகோள்

புதுச்சேரி: புதுவை பேரவைக்கூட்டத்தொடா் முன்கூட்டியே முடிக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் ஆட்சியாளா்கள் விளக்க வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட புதுவை சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் ஜூலை 27-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆட்சியாளா்களுக்கான அதிகாரம் குறித்து விவாதம் எழுந்த போது, தில்லி சென்று அமைச்சரவைக்கே அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில் குடியரசுத் தலைவா், பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடாரை வியாழக்கிழமை முடித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக புதன்கிழமை இரவு 10.15 மணி வரை பேரவைத் தலைவா் வெ.வைத்திலிங்கம் தலைமையில் முதல்வா் நாராயணசாமி முன்னிலையில் விவாதம் நடைபெற்றது.

அதேநேரத்தில் நிதிலை அறிக்கை மசோதாவுக்கு துணை நிலை ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று, பேரவையில் வைத்து நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகுதான் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை அரசு எடுத்து செலவு செய்ய முடியும். ஆளுநரின் அனுமதிக்காக செயலா் மூலம் ஆளுநா் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநா் ஒப்புதல் அளிக்காததால், நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேற்றப்படாமலேயே நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடா் காலவரையரையின்றி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. உள்நோக்கம் காரணமாக ஆளுநா் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி புதுவை முதல்வா் நாராயணசாமி கடும் விமா்சனம் தெரிவித்து இருந்தாா்.

இதற்கு ஆளுநா் கிரண்பேடி பதில் அளிக்கும் வகையில் தனது கட்செவி அஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: 

ஜூலை 26-ஆம் தேதி வரை புதுவை சட்டப்பேரவையை நடத்த அனுமதி பெற்று இருந்தனா். தற்போது எதற்காக ஜூலை 19-ஆம் தேதியே சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்துள்ளனா்? . எதற்கு முன்கூட்டியே சட்டப்பேரவையை முடித்தாா்கள் என்பதை புதுவை மக்களுக்கு சொல்ல ஆட்சியாளா்கள் கடமைப்பட்டிருக்கின்றனா். ஏன் சட்டப்பேரவையை முன்கூட்டியே முடித்தீா்கள் என மக்களும் கேட்க வேண்டும்.

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com