கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை வகுப்பதற்கும், அதுதொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இரு உயர்நிலைக் குழுவை அமைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
பசுப்பாதுகாப்பு என்ற பெயரிலும், குழந்தைகள் கடத்தல் வதந்தியாலும் நாட்டில் கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த இரு குழுக்களை அமைத்துள்ளது.
இதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அதேபோல், மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கெளபா தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டு, நீதித்துறைச் செயலர், சட்ட விவகாரங்கள் துறைச் செயலர், சட்ட வரைவுத்துறை செயலர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைச் செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவற்றில், மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கெளபா தலைமையிலான அதிகாரிகள் குழு, கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை திறம்பட கையாளுவதற்கான சட்டதிட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை தயாரித்து, அதை ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடம் அளிக்கும்.
அதை ஆய்வு செய்யும், ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு, பின்னர் அதை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கும். இந்த பரிந்துரை அறிக்கையானது 4 வாரங்களுக்குள்ளாக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
நாட்டின் சில பகுதிகளில் நிகழ்ந்த கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு அரசு ஏற்கெனவே கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டையும் நாடாளுமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்தது.
கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சட்ட விதிகளை காக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த அறிவுறுத்தலை மத்திய அரசு மதிக்கிறது.
மேலும், அத்தகைய சம்பவங்களை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்போது அதை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தை கடத்தல் சந்தேகத்தில் கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடந்த ஜூலை 4-ஆம் தேதி மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டது. அதேபோல், பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விவகாரம் தொடர்பாக 2016 ஆகஸ்ட் 9-இல் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டது என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் லாலாவன்டி அருகே உள்ள வனப்பகுதியில், கடந்த 21-ஆம் தேதி பசுக்களை கடத்திச் செல்வதாக சந்தேகத்தின் பேரில் அக்பர் கான் மற்றும் அவரது நண்பர் அஸ்லாம் ஆகிய இருவரும் 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் அக்பர் கான் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கு முன்பு, 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி அதே அல்வர் மாவட்டத்தில் பெலு கான் என்ற பால் வியாபாரி தனது பசுக்களை வாகனத்தில் கொண்டு செல்லும்போது, அவற்றை கடத்திச் செல்வதாக சந்தேகத்தின் பேரில் பசுப் பாதுகாப்புக் குழுவால் கொல்லப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நிகழ்ந்த கும்பல் கொலைகள் மற்றும் தாக்குதல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதேபோல, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை கடத்தல் என்ற சந்தேகத்தில் கட்செவி அஞ்சலில் பரவிய வதந்திகளால் சிலர் கும்பல் கொலை மற்றும் தாக்குதலுக்கு ஆளானதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!






