ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷங்கர் சரண் திரிபாதி ராகுலை விமர்சித்து பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டிப் பிடித்தார். ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷங்கர் சரண் திரிபாதி கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அண்மையில் இதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவர் ஜேபி சிங், பிரதமர் வேட்பாளருக்கு ராகுல் காந்தி தகுதியானவர் கிடையாது என்று அவரை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.
இப்படி,காங்கிரஸ் அல்லாத பிராந்தியக் கட்சியிலேயே, கட்சியின் முக்கிய தலைவர்களே ராகுலை விமர்சித்து கருத்து தெரிவித்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றால் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின் பலம் குறித்து சிந்திக்க வேண்டும்.
வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பலம் மிகுந்த பாஜகவை எதிர்க்கொள்ள காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வியூகம் வகுத்து வருகின்றன. இதன்மூலம் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகள் தங்களது பலத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழா, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் தங்களது பலத்தை வெளிப்படுத்த முயற்சித்தன. காங்கிரஸ் கட்சியுடன் பிராந்தியக் கட்சிகள் கைகோர்க்க தொடங்கியதால், பிரதமர் வேட்பாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பேச்சுகள் இருந்து வந்த நிலையில் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோரது பெயரும் பிரதமர் வேட்பாளருக்கு அடிபட்டது. பிராந்தியக் கட்சிகளுடைய தொண்டர்கள் தங்களது கட்சியின் தலைவரே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்காங்கே கோஷங்களை எழுப்பி வந்தனர்.
அப்படித்தான் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரது கட்சி தொண்டர்கள் ஒரு சில கூட்டங்களில் குரல்களை எழுப்பி வந்தனர். இந்த கருத்துக்கு அந்த தலைவர்கள் மறுப்புகளை தெரிவித்து வந்தாலும் அதனை வலுவாக நிராகரிக்கவில்லை.
இருப்பினும், பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தற்போதைய சூழலில் இல்லாவிடிலும் ராகுலை விமர்சிக்கும் நிர்வாகிகள் முக்கிய தலைவர்களாக இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவது காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் பேசிய விதம் பிரதமர் வேட்பாளருக்கான இடத்தை அவர் உறுதிசெய்யும் வகையில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










