நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு - யார் இவர்? இவர் எழுப்பிவிட்டு செல்லும் முக்கியக் கேள்விகள் என்ன?

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் செல்லமேஸ்வரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுகிறார்.
நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு - யார் இவர்? இவர் எழுப்பிவிட்டு செல்லும் முக்கியக் கேள்விகள் என்ன?
Published on
Updated on
2 min read

உச்சநீதிமன்ற நீதிபதியாக செல்லமேஸ்வர் அக்டோபர் 10,2011 பதவியேற்றார். இவர், 6 ஆண்டு 8 மாதம் மற்றும் 12 நாட்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்துள்ளார். இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் நீதிபதி. 

யார் இந்த செல்லமேஸ்வர்? 

* தனியுரிமை, மக்களின் அடிப்படை உரிமை என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்தார்.

ஜனவரி 12-ஆம் தேதி இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். இந்த 4 பேர் கொண்ட நீதிபதிகளுக்கு தலைமை தாங்கியவர் செல்லமேஸ்வர். அப்போது, அவர்கள் "உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக இல்லை, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது" என்று குற்றம்சாட்டினர்  

இவர்கள், மிகவும் சர்ச்சைக்குரிய வழக்கான அமித்ஷா தொடர்புடைய நீதிபதி லோயா வழக்கை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டினர்.    

கடந்த ஆண்டு 10-ஆம் தேதி மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதி மதன் லோகுர் பிறபித்த உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதற்கு அடுத்த நாளே ரத்து செய்தது. இதனை, சுட்டிக்காட்டும் வகையில் அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கருத்தை கூறினார். 

வழக்குகளை ஒதுக்குவது தொடர்பான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் வழக்கு ஒன்று செல்லமேஸ்வர் அமர்வுக்கு வந்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்த செல்லமேஸ்வர் கூறியதாவது, "எனது பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் நிறைவடைகிறது. இந்நிலையில், நான் பிறப்பிக்கும் உத்தரவு 24 மணி நேரத்துக்குள் மாற்றப்படுவதை நான் விரும்பவில்லை" என்றார். 

உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் செல்லமேஸ்வர் இடம்பெற்றிருந்தார். கர்நாடகத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ண பட் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டில் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை முடிவில் தெரிவித்தார். இதையடுத்து, கொலீஜியத்தால் மத்திய அரசுக்கு  அவருடைய பெயர் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

ஆனால், அதற்கு பிறகு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை உத்தரவின் பேரில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட அந்த நீதிபதி மீது மீண்டும் விசாரணை நடத்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு நீதிபதி மீது கொலீஜியத்திடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

அப்போது, அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு காட்டமான ஒரு கடிதத்தை செல்லமேஸ்வர் எழுதினார். அதன் நகல், மற்ற அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கும் அனுப்பப்பட்டது. அதில், அவர் அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கும் சாவு மணி போன்றது என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக தலைமை நீதிபதி அரசின் தலைமை அதிகாரி போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.    

செல்லமேஸ்வர் கடந்த ஏப்ரல் மாதம் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது அவர் நீதித்துறை மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில் அவர் எழுப்பிய மிக முக்கியமான கேள்வி ஒன்று, "ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறிப்பிட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதற்கான தீர்ப்பு எழுதி சுமார் 1 ஆண்டு வெளியிடவில்லை. ஜெயலலிதா இறந்தபின் தீர்ப்பு வழங்கியதால் என்ன பயன்?" என்றார். இந்த கேள்வியின் ஆழத்தை உணர்ந்தால் தமிழக அரசியல் முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கும் என்பதை உணரலாம்.  

செல்லமேஸ்வர் இடம்பெற்றுள்ள கொலீஜியம் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் பெயரை பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்தது. அதனை மத்திய அரசு நிராகரிக்க கொலீஜியம் மீண்டும் கூட்டம் கூடி ஆலோசனை நடத்தி அவரது பெயரை மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது கொலீஜியத்தில் இருந்து செல்லமேஸ்வர் விலகுவதால் கே.எம்.ஜோசப் விவகாரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

உச்சநீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதால் முன்கூட்டியே மே 10-ஆம் தேதி அவருக்கு பிரிவு உபசரிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதில் பங்கேற்க முடியாது என்று செல்லமேஸ்வர் தெரிவித்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com