பெங்களூரு வளர்ச்சித் திட்டங்களில் காங்கிரஸ் ஊழல்?: பாஜக குற்றச்சாட்டு

பெங்களூரில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக சார்பில் தயாரிக்கப்பட்ட 'குற்றப்பத்திரிகை' கையேடுகளை பெங்களூரில் வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் 
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக சார்பில் தயாரிக்கப்பட்ட 'குற்றப்பத்திரிகை' கையேடுகளை பெங்களூரில் வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் 
Updated on
1 min read

பெங்களூரில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
பெங்களூரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் வியாழக்கிழமை காங்கிரஸுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை வெளியிட்டு மத்திய அமைச்சரும், பாஜக மாநில பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் பேசியது:
தகவல் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற பெங்களூரு தற்போது பாலியல் பலாத்காரத்துக்கும், குப்பைக்கும், சட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கும் பெயர் பெற்றுள்ளது. 
பெங்களூரில் பகலிலேயே பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதிகளின் குழந்தைகள் குண்டர்கள், ரெளடிகள் போல் செயல்படுகின்றனர். இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இதுவரை அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. 
மத்திய அரசின் சிறந்த திட்டங்களையும் மாநில அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. பெங்களூரில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளது.
பெங்களூரில் மழையால் சாலையில் ஏற்பட்ட 24 ஆயிரம் குழிகளை மூட ரூ. 460 கோடி செலவு செய்ததாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், எந்த சாலைகளிலும் முழுவதுமாக குழிகளை மூடாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.
ரூ. 1800 கோடியில் உருக்கு மேம்பாலம் அமைக்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 
கால்வாய்களை சீரமைக்காததால், மழை வெள்ளத்தில் 16 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். ரூ. 1600 கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டது. 300-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன. சர்வதேச அளவில் சிறந்த நகரமாக பெங்களூரை மாற்ற பொலிவுறு நகரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசு, மாநகராட்சியின் மோசமான செயல்பாட்டால் அது தோல்வி அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு மாநில அரசின் மோசமான செயல்பாடே காரணம் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
பேட்டியின்போது, மத்திய அமைச்சர் அனந்த்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், அஸ்வத்நாராயணா, சுரேஷ்குமார், நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com