
ஹைதராபாத்: தனது எச்சரிக்கையையும் மீறி அலைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்து வந்த மகனின் கையை தந்தை ஒருவர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹைதாராபாத்தின் பஹடி ஷரீப் பகுதியைச் சேர்ந்தவர் மொஹம்மத் கையூம் குரேஷி (45). இறைச்சிக் கடை வைத்துள்ளார். இவரது மகன் காலித் (19). இவர் அந்த பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
அலைபேசியில் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் பார்த்து வருவது என்பது காலித்தின் பொழுதுபோக்கு. தனது வேலைக்கும் சரியாகப் போகாமல், இரவில் கண்விழித்து காலித் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது அவரது தந்தை குரேஷிக்கு கடும் எரிச்சலை ஊட்டியது.
இது தொடர்பாக அவர் காலித்துக்கு அறிவுரைகள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக காலித்துக்கும், குரேஷிக்கும் இடையே இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஞாயிறன்று காலித் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது,இறைச்சிக் கடைகளில் பயன்படுத்தும் கத்தியால் காலித்தின் வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக குரேஷி துண்டித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டார்.
காலித்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் விரைந்து வந்து அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் திங்களன்று குரேஷியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துண்டிக்கப்பட்ட காலித்தின் கையை இனி ஒன்று சேர்க்க வாய்ப்பில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.