காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு? 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு? 

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on

புதுதில்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது.

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், எந்தவித அதிகாரமுமில்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்காமல், அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அதிமுக  எம்.பிக்களை ராஜிநாமா செய்ய சொல்லுமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து விடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் காவிரி விவகாரம்  குறித்து சட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில், தமிழக அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவுடன் மாலை 5 மணிக்கு டெல்லியில் ஆலோசனை நடத்தினர்

அந்த கூட்டத்தில் நீதிமன்றம் விதித்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை எனில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆலோசனை வழங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com