நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதியான ஜெ.செலமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார்.
மார்ச் 21 என்று தேதியிடப்பட்டுள்ளஅந்தக் கடிதத்தின் நகல்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ள மற்ற 22 நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் செலமேஸ்வர் கூறியிருப்பதாவது:
'கர்நாடகத்தில் மாவட்ட அமர்வு நீதிபதியாக இருக்கும் கிருஷ்ணா பட் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு) இரண்டு முறை பரிந்துரைத்தது. எனினும், அவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் தூண்டுதலின்பேரில் இவ்வாறு நடைபெற்றுள்ளது.
கிருஷ்ணா பட் விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த கால சம்பவங்களை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசு நிர்வாகம் தற்போது மீறியுள்ளதைப் போல் அப்பட்டமாக மீறிச் செயல்பட்ட ஒரு சம்பவமும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. அதாவது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்று கூறி நாங்கள் (கொலீஜியம்) அவற்றை நிராகரித்ததோடு, அவருக்கு பதவி உயர்வு அளிக்க நாங்கள் பரிந்துரை அளித்தோம். அது நிலுவையில் உள்ள சூழலில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்தை அரசு நிர்வாகம் அணுகுவது முறையற்றது. இது வேண்டுமென்றே நீதித்துறையிடம் பணிவு காட்ட மறுக்கும் செயலாகும்.
மேலும், அரசு நிர்வாகமானது உயர் நீதிமன்றங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றில் என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன என்றும் கேட்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது.
அதேபோல் நீதித்துறைக்கும் எந்த மாநில அரசுக்கும் இடையே நட்புறவு நிலவினால் அது ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிப்பதாகவே அர்த்தம். நீதித்துறை, அரசு என இரண்டுமே கண்காணிப்பு அமைப்புகள்தானே தவிர, பரஸ்பரம் ஒன்றையொன்று விரும்பும் அமைப்புகள் அல்ல.
கடந்த 1981இல் அப்போதைய மத்திய சட்டத்துறை அமைச்சர், உயர் நீதிமன்றங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார். அதை உச்ச நீதிமன்றமம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டது. அதன் விளைவாகவே நீதிபதிகள் தொடர்பான முதல் வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதன் பின் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை கொலீஜியம் ஏற்றுக் கொண்டது.
நீதிபதிகளாகிய நாம் நமது சுதந்திரத்தையும், அமைப்பு சார்ந்த நேர்மையையும் அரசு நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு விட்டுக் கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது கடமையைச் செய்வதை விட அரசு நிர்வாகம் கூறுவதைச் செய்யவே ஆர்வமாக இருக்கிறார். அரசு நிர்வாகம் என்பது எப்போதுமே பொறுமை இல்லாததாக உள்ளது. அது நீதித்துறைக்கும் கீழ்ப்படியாததாக உள்ளது.
நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை தலைமைச் செயலகத்தில் உள்ள பல்வேறு துறைத் தலைவர்களைப் போல் மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. சில காலமாகவே நீதிபதிகளை நியமிப்பதற்கு கொலீஜியம் பெயர்களைப் பரிந்துரைத்த பிறகும் அரசு அவற்றை ஏற்றுக் கொள்வது என்பது விதிவிலக்காக மாறியுள்ளது. அது தொடர்பாக அரசுத் தரப்பு முடிவெடுக்காமல் கோப்புகளை நிலுவையில் வைப்பதே விதியாக உள்ளது. இந்த அதிருப்தி தரும் அனுபவத்தை நாம் கண்டு வருகிறோம். இதன் காரணமாக திறமைவாய்ந்த நீதிபதிகளும், நீதிபதி பதவியைப் பெற வேண்டியவர்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டியதை இழக்கின்றனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் கடிதப் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. பரிந்துரை அளிப்பதோடு உயர் நீதிமன்றத்தின் பணி முடிவடைய வேண்டும். அரசு நிர்வாகத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையில்தான் எந்த விதமான கடிதப் போக்குவரத்தும் நடைபெற வேண்டும்.
இந்தச் சூழலில் நீதித்துறையில் அரசுத் தரப்பு தலையிடும் விவகாரம் தொடர்பாக பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அரசியல்சாசனப்படி உச்ச நீதிமன்றம் இயங்குவதை உறுதிசெய்ய இது அவசியமாகும்' என்று அந்தக் கடிதத்தில் நீதிபதி செலமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கர்நாடக மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணா பட்டுக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். அவற்றை கடந்த 2016-இல் விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அது குறித்து விசாரணை நடத்துமாறு அப்போதைய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜிக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் கிருஷ்ணா பட் குற்றமற்றவர் என்று அறிக்கை தரப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதவி உயர்வு அளிக்குமாறு கொலீஜியம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


