சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வட மாநிலங்களில் புழுதிப் புயல்: பலி எண்ணிக்கை 84ஆக உயர்வு

வடமாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய புழுதிப் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது.

News image

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாதில் புயலால் சரிந்து விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்.

Updated On :14 மே 2018, 7:01 pm

வடமாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய புழுதிப் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது.
தில்லி, மேற்கு வங்கம், பிகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், மேகாலயம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு புழுதிப் புயல் வீசியது. அதைத் தொடர்ந்து இடி-மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது.
அப்போது பல கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசியது. இடி- மின்னல் பல இடங்களைத் தாக்கியது. இந்த இயற்கை சீற்றத்துக்கு, வடமாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் மின்சேவை துண்டிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு கோபுரங்கள் சேதமடைந்திருப்பதால், செல்லிடப் பேசி சேவை பாதிக்கப்பட்டது.
மரங்கள் பாதையில் விழுந்து கிடப்பதால், சாலை போக்குவரத்து முடங்கியது. சில இடங்களில் தண்டவாளங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து கிடப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. புயல் காற்றின் வேகம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புழுதிப் புயல்- கனமழைக்கு பலியானோரது எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகப்பட்சமாக 51 பேர் பலியாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உத்தரப் பிரதேசத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். இதற்கடுத்து மேற்கு வங்கத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆந்திரம் (12), தில்லி (2), உத்தரகண்ட் (1), பிகார் (4) ஆகிய இடங்களில் மொத்தம் 19 பேர் பலியாகியுள்ளனர்.
இதுதவிர, வடமாநிலங்களில் மொத்தம் 136 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 123 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தில்லி (11), உத்தரகண்ட் (2) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 பேரும் காயமடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த 12 நாள்களுக்கு முன்பு வீசிய புழுதிப் புயலுக்கு மொத்தம் 134 பேர் பலியாகினர்; 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போதும் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகப்பட்சமாக 80 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், ஆக்ரா நகரைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 9-ஆம் தேதி மீண்டும் புழுதிப் புயல் வீசியது. அந்தப் புயலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.