'தலித் முதல்வர்'- மூத்த தலைவர் எனும் முறையில் நான் தயார்: மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகத்தில் தலித் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மூத்த தலைவர் எனும் முறையில் தயாராக இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
'தலித் முதல்வர்'- மூத்த தலைவர் எனும் முறையில் நான் தயார்: மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் 2-ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தால் தலித் முதல்வரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே சித்தராமையா தனது கருத்தை வெளிப்படுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து தலித் முதல்வராக அறிவிக்கப்பட்டால் மூத்த தலைவர் எனும் முறையில் தயாராக இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காலாபுராகியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது:

நான் தலித் என்ற முறையில் எனக்கு எந்த பதவி வழங்கப்பட்டாலும் அதை நான் ஏற்க மாட்டேன். கட்சியில் ஒரு மூத்த தலைவர் என்னும் முறையில் முதல்வர் பதவி அளித்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். அரசியலில் எனக்கு ஓய்வு இல்லை. கட்சி அனுமதித்தால் அடுத்த தேர்தல்களிலும் போட்டியிடுவேன். எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையில் ஊடகம் தான் வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் இருவரும் கட்டுப்பட்டுள்ளோம். இது இன்னும் 12 மணிநேரங்களில் தெரிந்துவிடும் என்றார். 

முன்னதாக, 'கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். எனினும், நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்தான் நான் போட்டியிட்ட கடைசித் தேர்தலாகும். தலித் தலைவர் ஒருவர், முதல்வராக்கப்படுவாரா? எனக் கேட்கிறீர்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குவது என்று கட்சி முடிவு செய்தால் அதில் எனக்கு ஆட்சேபமில்லை' என்று சித்தராமையா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com