சபரிமலை கோயில் நடையை மூடப் போவதாக தந்திரி மிரட்டல் விடுத்தது தமது ஆலோசனையின் பேரில்தான் என்று கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
ஆளும் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆகியவை இந்த விவகாரத்தை முன்னிறுத்தி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளன.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணிய ஆர்வலர்களும், முற்போக்குவாதிகளும் அந்தத் தீர்ப்பை ஒருபுறம் வரவேற்றாலும், மறுபுறம் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்தத் தீர்ப்பின் மூலம் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் மதச் சம்பிரதாயங்கள் சிதைக்கப்படக் கூடும் என்பது அவர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு.
இந்நிலையில், தீர்ப்பின் தொடர்ச்சியாக கேரளத்தில் பலத்த போராட்டங்களும், பதற்றமான சூழல்களும் உருவாகின. குறிப்பாக, பெண்களே சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், சபரிமலை கோயில் நடை அண்மையில் திறக்கப்பட்டது.
அப்போது ஹைதராபாதைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா ஆகியோர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர்.
அந்த தருணத்தில் கோயிலின் தந்திரி கண்டரரூ ராஜீவரு, ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அப்பெண்கள், சன்னிதானத்தை அடையும்பட்சத்தில் கோயில் நடையை காலவரையின்றி மூடப் போவதாக அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே ஐயப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க இயலாமல் அப்பெண்கள் திரும்பிச் சென்றனர்.
இந்த சூழலில், திருவனந்தபுரத்தில் இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகத் தெரிகிறது. சபரிமலை தந்திரி, கோயிலின் நடையை அடைக்கலாமா? என்பது குறித்து தம்மிடம் ஆலோசித்ததாகவும், அதன் பின்னரே அதுதொடர்பாக அறிவிப்பை வெளியிட்டதாகவும் அக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மேலும், சபரிமலை விவகாரம் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு என்றும், அதை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்துவது கட்சியின் செயல் திட்டங்களில் ஒன்று என்றும் ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாகத் தெரிகிறது.
இதற்கு இடதுசாரி முன்னணியும், காங்கிரஸும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளன. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த ஸ்ரீதரன் பிள்ளை, தாம் ஒரு வழக்குரைஞர் என்பதால், தம்மிடம் சபரிமலை தந்திரி சட்ட ஆலோசனை கேட்டதாகவும், நடையை அடைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் தமது பங்கு எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







