நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா தாக்கல் செய்த இந்த மனுவில், "நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, சுப்பிரமணியன் சுவாமி சுட்டுரையில் கருத்து தெரிவிப்பதன் மூலம் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். எனவே, வழக்கு குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்ததாவது:
குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் சுட்டுரைப் பதிவுகள் வழக்கு விசாரணையைப் பாதித்துள்ளதாகத் தெரியவில்லை. நீதிமன்ற விசாரணைக்குக் குறுக்கீடு ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. இது குறித்து மனுதாரரிடம் தெளிவான விளக்கங்களும், சாட்சியங்களும் இல்லை.
வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்குக்கான சாட்சியங்களும் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்ததில், சுட்டுரையில் சுவாமி பதிவிட்டது வழக்கின் போக்கை பாதிப்பதாகத் தோன்றவில்லை.
சுவாமியின் பதிவுகள் மனுதாரரைப் பாதிப்பதாகத் தோன்றினால், அவர் சட்டப்பூர்வ முறையில் தீர்வுகள் காணலாம். ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்த நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, "சுட்டுரையில் கருத்து தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது' என்று சுவாமி தெரிவித்திருந்தார்.
பின்னணி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 90.25 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரால் ரூ. 50 லட்சம் முதலீட்டில் யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் உள்ளனர். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் முறைகேடாக அபகரித்து விட்டதாக, சுப்பிரமணியன் சுவாமி தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசினகுடி வனப் பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

ஜவுளி உற்பத்தியாளா்களின் கூலி குறைப்பால் விசைத்தறியாளா்கள் விரைவில் போராட்டம்

கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் யானை நடமாட்டம்

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பெண் வரி வசூலா் கைது
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



