
புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் தூத்துக்குடியில் காற்று மாசு குறையவில்லையே? என்று வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் தில்லியில் திங்களன்று கையெழுத்தானது. இதில் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த மூன்று இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்துக்கு காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முறையான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வானது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் தில்லியில் திங்களன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 'ஸ்டெர்லைட்' வேதாந்தா குழும நிறுவனரான அனில் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
எங்கள் குழுமத்திற்கு டெல்டா பிராந்தியத்தில் கடல் பகுதியை ஒட்டித்தான் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் நிலத்திற்கு பாதிப்பு எதுவும் இருக்காது. எந்த இடங்கள் என்பதை இப்போது வெளியிட முடியாது.
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும். அதற்காகத்தான் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் மூடப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அங்கு எடுக்கப்பட்ட சோதனையில் தூத்துக்குடியில் காற்று மாசு குறையவில்லையே? அங்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் புகைதான் காற்றும்மாசுக்கு காரணம். ஆனால் எங்கள் மீது காரணமின்றி குற்றம் சாட்டப்படுகிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.