கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் நிம்மதி 

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது நடவடிக்கை தேவையில்லை  என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் பிராங்க்கோ முலாக்கல் நிம்மதியடைந்துள்ளார்.
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் நிம்மதி 
Published on
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது நடவடிக்கை தேவையில்லை  என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் பிராங்க்கோ முலாக்கல் நிம்மதியடைந்துள்ளார். 

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க பேராயரான பிராங்க்கோ முலாக்கல் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகார் அளிக்கப்பட்டு 75 நாள்களுக்கு மேலாகியும் பேராயர் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தொடர்ந்து கொச்சியில் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தனக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட பேராயரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் இந்தியாவுக்கான வாடிகன் தூதர் கியாம்பெடிஸ்டா டிக்வட்ரோவுக்கு கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார்.  கடந்த 8-ம் தேதி அனுப்பிய இக்கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை அந்த கன்னியாஸ்திரி வழங்கினார். 

அதில், அரசியல், பணபலத்தின் மூலம் தனக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பதாக பேராயர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இக்கடிதத்தின் நகல் இந்திய கத்தோலிக்க பேராயர்களின் கூட்டமைப்பின் (சிபிசிஐ) தலைவர் கார்டினல் ஆஸ்வால்டு கிரேஷியஸ் மற்றும் டெல்லி மெட்ரோபாலிட்டன் பேராயர் அனில் கெளட்டோ உள்பட 21 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே, பேராயர் பிராங்க்கோ முலாக்கல் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. தேவாலயத்திற்கு எதிரானவர்கள் தான் என் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். முன்பு ஒருமுறை அந்த கன்னியாஸ்திரியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து அவரை கண்டித்தேன். அதன் காரணமாகவே என் மீது புகார் கூறி வருகிறார். எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் காவல்துறையினர் என்னை இதுவரை கைது செய்யவில்லை' என்றார்.

இந்நிலையில் கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது நடவடிக்கை தேவையில்லை  என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் பிராங்க்கோ முலாக்கல் நிம்மதியடைந்துள்ளார். 

இதுதொடர்பான இரு வழக்குகள் கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, கேரளா மாநில காவல்துறை சார்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதன் மீது திருப்தி தெரிவித்தது. அத்துடன், 'இது பழைய வழக்கு என்பதால், விசாரணை நடத்துவதற்கு காலதாமதாக வாய்ப்பு உள்ளது. எனவே கைது நடவடிக்கையை விட குற்றவாளிக்கு இறுதி தணடனை என்பதே முக்கியமானதாகும்' என்றும் தெரிவித்துள்ளது. 

அதேசமயம் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கினை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது. 

நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு கன்னியாஸ்திரி தரப்பில் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com