56-இல் இருந்து 36 ஆகவுள்ள மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை: மத்திய அரசின் அடுத்த அதிரடி 

கடந்த வாரம் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக அறிவித்த மத்திய அரசு, தற்போது மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கையை 36 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
56-இல் இருந்து 36 ஆகவுள்ள மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை: மத்திய அரசின் அடுத்த அதிரடி 
Published on
Updated on
1 min read

புது தில்லி: கடந்த வாரம் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக அறிவித்த மத்திய அரசு, தற்போது மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கையை 36 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

மண்டல கிராம வங்கிகள் என்பவை ஆர்ஆர்பி சட்டம் 1976-ன் கீழ் சிறுவிவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும்  கிராமப்புற கலைஞர்களுக்கு கடன் அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தில், இந்த வங்கிகள் தங்களது மூலதனத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

தற்போது நாட்டிலுள்ள மண்டல கிராம வங்கிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை ஸ்பான்ஸர் வங்கிகளும், 15 சதவீதம் மாநில அரசும் வைத்துள்ளன. தற்போது நாடு முழுவதும் 56 மண்டல கிராம வங்கிகள் உள்ளன. 

இந்நிலையில் தற்போதுள்ள மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கையை 36 ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலஅரசுகளின் உதவியுடன் மண்டல கிராம வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அரசின் நிதியுதவியில் செயல்பட்டு வரும் வங்கிகள், வங்கிகளை இணைப்பதற்கான செயல் திட்டத்தை மாநிலத்துக்குள்ளே தொடங்கி விட்டன 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இந்த இணைப்பின் மூலம் வங்கிகளின் கடன்கொடுக்கும் தகுதி அதிகரிக்கும். மக்களுக்கு சேவைகளை  விரைவாக அளிக்க முடியும், மேலும், தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தி, செலவுகளைக் குறைக்கவும், மூலதனத்தை அதிகப்படுத்தவுமே அரசு இதனைத்  திட்மிட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஆனாலும் இந்த வங்கிகள் இணைப்புக்குப் பின்பும் அரசிடம்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். 

மண்டல கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு வரும் செயல்பாடானது கடந்த 2005-ம் ஆண்டு முதலே படிப்படியாகத் துவங்கி விட்டது. கடந்த 2005-ம் ஆண்டு 196 வங்கிகள் இருந்த நிலையில் 2006-ல் இது 136ஆகக் குறைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டுக்குள் 82ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 56 வங்கிகள் 36ஆகக் குறைக்கப்பட உள்ளதாக தகவல வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com