ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆதார் திட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கவுள்ளது. 
ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
Published on
Updated on
1 min read

ஆதார் திட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கவுள்ளது. 

கடந்த 2016-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஆதார் சட்டத்தின் பயன்பாடு குறித்தும், அதன் சட்ட அங்கீகாரத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 4 மாதங்களாக விசாரித்து வந்தது.

மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்களான கபில் சிபல், ப.சிதம்பரம், ராகேஷ் திரிவேதி, ஷியாம் திவான், அரவிந்த் தத்தார் ஆகியோரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த மே மாதம் 10-ஆம் தேதி வழக்கின் இறுதித் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வழக்கு தொடர்பாக, தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக முன்வைக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான வாதத்தின்போது, பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியது, வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண், பான் கார்டு ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கியது ஆகியவற்றை ஆதரித்து மத்திய அரசு வாதிட்டது.

அதற்கு செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக, பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு தவறாகப் புரிந்து கொண்டு விட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, ஆதாருக்கான சட்ட அங்கீகாரத்தை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.எஸ்.புட்டசுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற வாதத்தின்போது, ஆதார் சட்டத்தை நிதி மசோதா என்று மக்களவைத் தலைவர் குறிப்பிட்டது சரியே என்று மத்திய அரசு முன்வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
 
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். அதனால், அதற்கு முன் அவர் தலைமையிலான அமர்வு பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில், ஆதார் குறித்தான வழக்கும் மிக முக்கியமான வழக்காக பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை வழங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com