ஸ்ரீதேவி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாரா?: கேள்விகளை எழுப்பும் பிரபல இயக்குநர்!

எல்லோரும் நினைப்பது போன்று ஸ்ரீதேவியின் வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமான ஒன்றாக இருந்ததா என்று நிறைய  கேள்விகளை, பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தன்னுடைய கடிதம் ஒன்றில்..
ஸ்ரீதேவி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாரா?: கேள்விகளை எழுப்பும் பிரபல இயக்குநர்!

மும்பை: எல்லோரும் நினைப்பது போன்று ஸ்ரீதேவியின் வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமான ஒன்றாக இருந்ததா என்று நிறைய  கேள்விகளை, பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தன்னுடைய கடிதம் ஒன்றில் எழுப்பியுள்ளார்.

உறவினரது திருமணத்தில் பங்கேற்பதற்காக துபை சென்றிருந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த 14-ஆம் தேதியன்று தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் சுயநினைவின்றி நீரில் மூழ்கி இறந்தார். இது லட்சக்கணக்கான அவரது ரசிகர்களை சோகத்திலாழ்த்தியது.

இந்நிலையில் ஸ்ரீதேவியுடன் க்ஷணம் க்ஷணம், கிரேட் ராப்பரி, ஹைரான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிரபல பாலிவுட் இயக்குனரான ராம் கோபால் வர்மா தன்னுடைய முகநூல் பக்கத்தில் 'ஸ்ரீதேவிக்கு எனது காதல் கடிதம்" என்ற தலைப்பில் வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் எல்லோரும் நினைப்பது போன்று ஸ்ரீதேவியின் வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமான ஒன்றாக இருந்ததா என்று நிறைய  கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் இருந்து சில பகுதிகள் பின்வருமாறு:

நிறைய பேருக்கு ஸ்ரீதேவி என்றால் அவரது அழகான முகம், சிறந்த திறமை மற்றும் அழகான இரண்டு மகள்களுடன் கூடிய நிறைவான குடும்பம் என்று ஒரு முழுமையான வாழ்க்கை என்பதாக ஓர் எண்ணம். வெளியிலிருந்து பார்ப்பதற்கு எல்லாமே விரும்பக்கூடிய ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் ஸ்ரீதேவி ஒரு மகிழ்ச்சியான நபரா? மகிழ்ச்சியான ஒரு வாழ்வை வாழ்ந்தாரா?

ஸ்ரீதேவியுடனான எனது முதல் படமான 'க்ஷணம் க்ஷணம்' காலத்திலிருந்து நான் நேரடியாக அவரைப் பார்த்து வருகிறேன். அவரது தந்தை  உயிருடன் இருக்கும் வரை வானில் சிறகடிக்கும் பறவையாக இருந்த அவரது வாழ்வானது, அவரது மறைவுக்குப் பிறகு அவரது தாயாரின் அதீதமான பாதுகாப்பு நடவடிக்கைகளால் கூண்டுக்குள் சிக்கிய பறவை போல மாறி விட்டது.

அப்பொழுதெல்லாம் நடிகர்களுக்கு பெரும்பாலான சமயம் சம்பளமானது கருப்புப் பணமாக வழங்கப்படுவது வழக்கம். சோதனைகளுக்குப் பயந்து அவரது தந்தை பணத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். ஆனால் அவர் மரணமடைந்ததும் நம்பியவர்கள் அனைவரும் அவரை ஏமாற்றி விட்டனர். அத்துடன் அவரது தாயாரும் தெரியாமல் சட்ட சிக்கல்கள் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்தார். அதுவும் அவரை சிக்கலில் ஆழ்த்தியது. இதனால் அவர் போனி கபூரை திருமணம் செய்யும் பொழுது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார். போனி கபூரும் அந்த சமயத்தில் கடன் சிக்கலில்தான் இருந்தார்.

ஸ்ரீதேவியின் தயார் அவர் இறப்பதற்கு முன்பு மிச்சமிருந்த எல்லா சொத்துக்களையும் ஸ்ரீதேவி பெயருக்கு மாற்றி எழுதி வைத்து விட்டார். ஆனால் அவர் இறந்த பின்பு ஸ்ரீதேவியின் இளைய சகோதரி ஸ்ரீலதா உறவினரான ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று திருமணம் செய்துகொண்டார். அத்துடன் தாயாரின் சொத்துக்களில் சரி பாதி தனக்கு வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வாறு லட்சக்கணக்கானோரால் விரும்பப்பட்ட ஒரு நடிகை தனது வாழ்வில் தொடர்ந்து தனியாக இருந்தார், போனி கபூரைத் தவிர யாரும் அப்பொழுது உடன் இல்லை.  மிக இளம் வயதில் நடிக்க வந்ததால் அவர் தன் வாழ்வில் பல சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறார். ஒரு சாதாரண நிலையில் இருக்க வாழ்க்கை அவருக்கு கடைசி வரை  அவகாசம் கொடுக்கவே இல்லை.

உலகம் முழுவதும் அவரை பலர் அழகு என்று கருதினார்கள். ஆனால் அவர் தன்னை அவர் அப்படி நினைத்தாரா?

ஸ்ரீதேவி எப்பொழுதுமே தனது உளவியல் சார்ந்த பயங்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று  பதற்றத்துடன் இருந்தார்,. எனவே தன்னைச் சுற்றி ஒரு உளவியல் ரீதியிலான சுவரை எழுப்பி அதற்குள்  வாழ்ந்து வந்தார்.

எப்பொழுதும் மேக்கப் போட்டுக் கொண்டு,  கேமராவுக்கு முன்னால் மட்டும் அல்ல, கேமராவுக்கு பின்னாலும் யாரோ ஒருவராக நடிக்க வேண்டிய நிலைஅவருக்கு இருந்தது.

அத்துடன் விரைவில் திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ள தனது மகள் ஜான்வி மற்றும் மற்றொரு மகளான குஷி ஆகியிருவரையும் திரையுலகம் ஏற்றுக் கொள்ளுமா என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. சுருக்கமாக அவரை ஒரு பெண்ணின் உடம்புக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை என்று கூறலாம். 

பிரபலங்களின் வாழ்வில் ஸ்ரீதேவியுடையது போல நிறைய எதிர்பாரா மரணங்களும், தற்கொலைகளும் பெரிய விருந்து நிகழ்ச்சிகளுக்கு பிறகே நடக்கின்றன. அதற்கு காரணம் இத்தகைய நிகழ்ச்சிகளில் தன்னைச் சுற்றியுள்ள உலகம் இத்தனை மகிழ்ச்சியுடன் இருப்பதை, கொண்டாடுவதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர்கள் முழுமையாக அவ்வாறு இருக்க இயலாமல் இருப்பதன் காரணமாக தாங்களே இருப்பதாக எண்ணி,  வெறுமை அவர்களைச் சூழ்கிறது.

நன் பொதுவாக இறந்தவர்களுக்கு "ரெஸ்ட் இன் பீஸ்" என்று சொல்வதில்லை. ஆனால் ஸ்ரீதேவியை பொறுத்த அளவில், நான் அதனைச் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இதன் காரணமாக  அவரது வாழ்வில் (அல்லது மரணத்தில்?) முதன்முறையாக அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com