பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் அவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் அவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைந்துள்ளது.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் சாமானிய மக்களுக்கு நேர்ந்துள்ள சங்கடங்களை சற்றுக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய விலையானது வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே, மாநில அரசுகளும் தங்களது உள்ளூர் வரிகளை லிட்டருக்கு ரூ.2.50 வரை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, உத்தரகண்ட், கோவா, அருணாசலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான உள்ளூர் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த மாநிலங்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு மொத்தமாக ரூ.5 குறைந்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. அந்த அளவுக்கு இங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தேவை இருக்கிறது.
கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் அதன் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. மற்றொரு புறம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது வருகிறது. இதன் விளைவாக, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முன்னெப்போதும் இல்லாதவாறு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.90-ஐ தொட்டது. இந்த விலை உயர்வு வாகனஓட்டிகளை மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களையும் கடும் இன்னலுக்கு ஆளாக்கியது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது.
இதையடுத்து, இப்பிரச்னை நாட்டின் பிரதான விவாதப் பொருளாக உருவெடுத்தது. பொதுவாக, ஒரு லிட்டர் எரிபொருளின் விலையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வரியாக விதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே வரி விதிப்பதுதான் விலையேற்றத்துக்கு காரணம் என்றும், அந்த நடைமுறையை மாற்றி பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இத்தகைய நெருக்கடியான சூழலில்தான் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கலால் வரி லிட்டருக்கு ரூ.1.50 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று  எரிபொருள் மீதான விலையில் ரூ.1 குறைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்போது எல்லாம் அதன் மீதான வரித்தொகையும் உயருகின்றன. இதனால், அனைத்து மாநிலங்களுக்கும் வருவாய் அதிக அளவில் கிடைத்து வருகிறது. மத்திய அரசு தற்போது வரியைக் குறைத்தது போல மாநிலங்களும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
லிட்டருக்கு ரூ.2.50 வீதம்ஹ வரி வருவாயை குறைப்பதால் எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை. பெட்ரோல், டீசல் விலையை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து உதட்டளவில் குரல் கொடுத்து வரும் மாநில அரசுகள் தற்போது மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வரி குறைப்பை அமல்படுத்துகிறதா? என்பதை பார்க்கலாம்.
ஏனெனில், பாஜக ஆளும் பெரும்பாலான மாநில அரசுகள் மட்டுமே அத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளன. பிற மாநிலங்களில் இதுவரை விலை குறைப்பு அமலாகவில்லை என்றார் அருண் ஜேட்லி.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து அப்போது அவர்கள் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்வதால் நாட்டில் பொருளாதார நெருக்கடிச் சூழல் உருவாகியிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைத்தது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. அப்போது 2014 நவம்பர் முதல் 2016-ஆம் ஆண்டு ஜனவரி வரை மத்திய அரசு 9 கட்டங்களாக பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.11.77 அதிகரித்தது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.13.47 படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஒருமுறை மட்டும் கலால் வரி ரூ.2 குறைக்கப்பட்டது.
கேரளத்தில் விலை குறைப்பு இல்லை: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பெட்ரோல், டீசல் மீது தங்கள் மாநில அரசு விதித்து வரும் மதிப்புக் கூட்டு வரியைக் (வாட்) குறைக்கப்போவதில்லை என்று கேரள மாநில அரசு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com