உன்னாவ் சம்பவம் தொடர்பான தனது உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் 

உன்னாவ் பலாத்கார சம்பவம் தொடர்பாக வியாழனன்று தான் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உன்னாவ் சம்பவம் தொடர்பான தனது உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் 

புது தில்லி: உன்னாவ் பலாத்கார சம்பவம் தொடர்பாக வியாழனன்று தான் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவின்  குல்தீப் சிங் செங்கர், இவர் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது அத்தைகள் இருவர் மற்றும் அவர்களது வழக்கறிஞர் ஆகியோர் காரில் சென்ற போது, லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது ஆபத்தான நிலையில் லக்னௌவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை எம்எல்ஏ செங்கர் திட்டமிட்டு நிகழ்த்தியதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள்.

அதேநேரம் வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் வியாழனன்று விசாரித்தது. அப்போது பாலியல் வழக்கு, விபத்து ஏற்படுத்திய வழக்கு உள்பட 5 வழக்குகளையும் தில்லி நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனறும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கவும் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் விபத்து வழக்கின் விசாரணையை 7 நாட்களுக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் உன்னாவ் பலாத்கார சம்பவம் தொடர்பாக வியாழனன்று தான் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கு வெள்ளியன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, விபத்து தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாகச் சென்று வருகிறது . விபத்து ஏற்படுத்திய வழக்கு விசாரணையில் இருக்கும் போது மற்ற வழக்குகளை தில்லிக்கு மாற்ற இயலாது. அதுவரை முந்தைய உத்தரவை ஒத்திவைக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கிற்கு உதவுவதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் வி. கிரி கூறுகையில், " பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது சுயநினைவின்றி இருக்கிறார், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரும் நிலையில் உடல் நிலை இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் உடல்நிலையும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை " என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

இரு தரப்பு ஆலோசனைகளையும் கேட்ட பின்னர் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

விபத்து ஏற்படுத்திய வழக்கின் விசாரணை நிலுவையில் இருப்பதால், ரேபரேலி நீதிமன்றத்தில் இருந்து விசாரணையை தில்லிக்கு மாற்றும் எங்களின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்

அதேபோல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்த பெண்ணின் பெற்றோர் லக்னௌவில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றும் முடிவை அவர்களிடமே விடுகிறோம்.

ரேபரேலி சிறையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமாவை டெல்லி திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com