அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகளால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பதற்றமும், குழப்பமும் நிலவுகிறது. 
அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில், அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின்படி அனைவரையும் உடனடியாக காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவம் எச்சரித்தது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகளால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பதற்றமும், குழப்பமும் நிலவுகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினரை குவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து அளிக்கும் 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள் 4 பேரும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளையும் இந்திய ராணுவத்தினர் அதிரடியாக சுட்டு வீழ்த்தினர். அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

வெள்ளைக் கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ படை வீரர்களின் உடல்களை மீட்டுச் செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

ஜூலை 31-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 36 மணிநேரத்தில் இந்த போக்கு தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் ராஜீவ் கௌபா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த உடன் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com