காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: தமிழ்நாட்டை உதாரணம் கூறி பேசிய அமித் ஷா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
kashmir live news
kashmir live news
Published on
Updated on
1 min read


புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகின்றன.  

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான மசோதாவையும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை கொண்டு வந்தார். 

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும், கடும் அமளிக்கு நடுவே, இது தொடர்பான தீர்மானம் மற்றும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த தீர்மானம் மற்றும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமித் ஷா பதில்
எதிர்க்கட்சியினருக்கு பதிலளித்துப் பேசிய அமித் ஷா, சிறப்பு அந்தஸ்து இருந்ததால்தான் இத்தனை ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் வறுமையில் உள்ளனர்; ஊழலும் அதிகம் நடந்து வந்தது; மூன்று குடும்பங்கள் மாநிலத்தைக் கொள்ளையடித்து வந்தன. மேலும், 370-ஆவது சட்டப் பிரிவால்தான் இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் இணைந்தது என்று கூறுவது தவறு. 1947 அக்டோபர் 27-ஆம் தேதியே இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் இணைந்துவிட்டது. ஆனால், சிறப்பு அதிகாரம் 1949-இல்தான் அளிக்கப்பட்டது. மேலும் 370-ஆவது சட்டப் பிரிவு என்பது தற்காலிகமானதுதான். வாக்கு வங்கி அரசியல், சரியான முடிவெடுக்கும் துணிச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் முந்தைய அரசுகள் அதனை நீக்காமல் இருந்தன. 

தமிழ்நாட்டை உதாரணம் கூறி... : சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், ஜம்மு-காஷ்மீரின் கலாசாரம், பண்பாடு, தனித்தன்மை அழிந்துவிடும் என்று கூறப்படுவது உண்மையல்ல. தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மொழி, கலாசாரம், பண்பாடு, தனித்தன்மையை சிறப்பாக கட்டிக்காத்து வருகின்றன.  பூலோக சொர்க்கம் என்று கூறப்படும் காஷ்மீர், இனிமேல் உண்மையில் அந்த நிலையை அடையும். மாநிலத்தில் சகஜநிலை திரும்பாமல் இருக்க காரணமாக இருப்பதே 370-ஆவது சட்டப் பிரிவுதான். சிறப்பு அந்தஸ்து காரணமாகவே அங்கு பயங்கரவாதத்தை ஒழிக்க முடிவில்லை.

மேஜையைத் தட்டி வரவேற்ற மோடி: ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி இல்லாதது, நிலம் விலை மிகவும் குறைவாக இருப்பது, சுற்றுலா மேம்படாமல் இருப்பது, தொழில் வளம் குறைந்திருப்பது, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காதது, கல்வி உரிமை இல்லாதது, இத்தனை ஆண்டுகளில் பயங்கரவாதத்துக்கு 41,400 பேர் பலியானது என அனைத்துக்குமே காரணம் 370-ஆவது சட்டப் பிரிவுதான். அது நீக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உண்மையாகவே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது என்றார் அமித் ஷா. 

அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் மாநிலங்களவைக்கு வந்திருந்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதிலடி கொடுத்து முக்கியக் கருத்துகளை முன்வைத்தபோது, மோடி மேஜையைத் தட்டி வரவேற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com