18 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் எனது முதல் சுற்றுலா: மோடியின் சுவாரஸ்ய பதில்களுடன் 

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் எனது முதல் சுற்றுலா என்று மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
18 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் எனது முதல் சுற்றுலா: மோடியின் சுவாரஸ்ய பதில்களுடன் 
Published on
Updated on
2 min read

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் எனது முதல் சுற்றுலா என்று மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி உலகெங்கும் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியின் நாயகனான பியர் கிரில்ஸ், இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பது தொடர்பான பாடங்களை கற்றுத் தருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகத் தலைவர்களில் ஒபாமாவுக்குப் பிறகு பிரதமர் மோடி பங்கேற்று இந்தியர்களை மட்டுமல்ல, உலக மக்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.

இந்த நிகழ்ச்சி 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரகண்டில் உள்ள ஜிம் கோர்பெட் தேசியப் பூங்காவில் படமாக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி 180 நாடுகளில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் திங்கள்கிழமை ஒளிபரப்பானது. 

நிகழ்ச்சியில் காடுகளின் கடினமான பாதையில் பியர் கிரில்ஸுடன் நடப்பது, மிதவைப் படகில் அவருடன் ஆற்றில் பயணிப்பது என பிரதமர் மோடி தனது சாகச முகத்தை வெளிக்காட்டினார். நிகழ்ச்சியின் மூலம், இயற்கை பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றை பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

இந்த சாகச பயணத்தின் போது மோடி கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளை நான் நாட்டின் வளர்ச்சிக்காகவே செலவிட்டுள்ளேன். ஒருவேளை இதனை சுற்றுலா என்று அழைக்கலாம் என்றால், இது 18 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் என்று சிரித்தபடியே கூறினார்.

அப்போது பியர் கிரில்ஸின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். ஒரு பிரதமராக நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் யார் என்று எப்போதுமே நினைத்தது கிடையாது, நான் என்ன செய்யப் போகிறேன், எனது கடமை என்ன என்பதை மட்டுமே நினைப்பேன் என்றார். மேலும், மக்களின் கனவுகளையே, எனது கனவாக நினைத்து, அதனை நிறைவேற்ற முயல்வேன் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் மோடி பேசுகையில், பயமோ, பதற்றமோ நான் அனுபவித்தது கிடையாது. இயல்பாகவே நான் நேர்மறையான சிந்தனை நிறைந்தவன். எதையும் அவ்வாறே எதிர்கொள்வதால், எந்தவொரு விஷயத்திலும் நான் ஏமாற்றத்தை சந்தித்தது கிடையாது. வாழ்க்கையில் சறுக்கல் இருந்தால், அதிலிருந்துதான் முன்னேற்றம் தொடங்கும். 

இயற்கையை அழிக்காமல் அதன் மீது அன்பு கொண்டு வாழ்வது, ஒவ்வொருவரின் மனதைப் பொருத்தது. இயற்கையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற உயர்ந்த கருத்தை உலகத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது. 

ஒரு மாநில முதல்வராக நான் 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அது என் வாழ்வின் புதிய பயணம். நான் பிரதமராக வேண்டும் என்று எனது நாடு முடிவு செய்தது. அந்தப் பணியை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறேன். எனது நோக்கம் எப்போதும் வளர்ச்சியை நோக்கியதுதான். இந்தப் பணி எனக்குத் திருப்தி அளிக்கிறது. 

முதல்வர், பிரதமர் என எந்தப் பணியில் இருந்தாலும் எனக்கான பொறுப்புகளை மட்டுமே நான் கவனத்தில் கொண்டிருப்பேன். அந்தப் பதவிகளின் அதிகாரம் எனது தலைக்கு ஏறாது என்று பிரதமர் மோடி கூறினார்.

 நிகழ்ச்சியின் ஓர் இடத்தில் நாம் புலிகள் உலவும் பகுதியில் நடந்து செல்கிறோம் என்று பியர் கிரில்ஸ் எச்சரித்தார். அதற்கு பிரதமர் மோடி, கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். இயற்கையைக் கண்டு நாம் அஞ்சக் கூடாது. இயற்கையால் நமக்கு பிரச்னை ஏற்படுகிறது என்று எண்ணும்போதுதான் நமக்கு நிஜமாகவே பிரச்னை தொடங்குகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com