
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து வந்தபோது, அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இதில் போலீசாரின் ஆயுதங்களை பறித்து, போலீஸார் மீதே தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் போலீஸார் இருவரும் காயமடைந்ததாக தெலங்கானா போலீசார் விளக்கம் தெரிவித்தனர்.
ஹைதராபாத் என்கவுன்டர் அரங்கேற்றத்துக்கு முக்கியக் காரணமானவர் சைபராபாத் காவல் ஆணையர் விஸ்வநாத் சஜ்ஜனார். இவருக்கு என்கவுன்டர் ஒன்றும் புதிதல்ல. இன்று நடந்தது போல ஏற்கனவே கடந்த 2008 டிசம்பரிலும் சஜ்ஜனார் ஒரு என்கவுன்டரை நிகழ்த்தியுள்ளார். சிறுமிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில், குற்றவாளிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அது.
கடந்த டிசம்பர் 13, 2008ல் இரண்டு சிறுமிகள் மீது ஆசிட் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் ஷகாமுரி சீனிவாச ராவ் (25), பொத்தராஜு ஹரிகிருஷ்ணா (22) மற்றும் பஜ்ஜூரி சஞ்சய் (22) ஆகிய மூவரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். அந்த சமயத்திலும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் போலீஸாருக்கு நன்றி கூறி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்கு பின்னர் அதே டிசம்பர் மாதத்தில் இன்று ஒரு என்கவுன்டர் சம்பவம் நடந்துள்ளது.
விஸ்வநாத் சஜ்ஜனார் ஹப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் 1996ல் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஆந்திராவில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். வருமானவரித்துறையில் பணிபுரிந்த தனது தந்தையுடன் இணைந்து சிறிது காலம் பணிபுரிந்துள்ளார். இதன் பின்னரே யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.
இவரது சகோதரர் டாக்டர் மல்லிகார்ஜுன் சஜ்ஜனார் என்கவுன்டர் குறித்து கூறுகையில், 'நாட்டின் குடிமகனாக, போலீஸாரின் செயலில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது சகோதரர் ஒரு போலீஸ் அதிகாரி. அவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாகவே அவர் ஹைதராபாத்தின் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவருக்கும், அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்தார்.
மேலும், நண்பர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள் பலரும் நேரில் வந்தும், போன் மூலமாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருவதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.