
கொல்கத்தா: சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கொடிகட்டிப் பறந்த "ரோஸ் வேலி', "சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் தற்போதைய கொல்கத்தா மாநகர காவல்துறைத் தலைவராக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார்.
அவர், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்தபோது, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக விசாரிப்பதற்காக பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகாத நிலையில், அவரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காவல்துறைக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் அளித்தனர். அதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு செல்லுமாறு சிபிஐ அதிகாரிகளை காவல்துறை அறிவுறுத்தியது.
அதேசமயம், சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து சென்றனர். ராஜீவ் குமாரை விசாரிப்பதற்கு உரிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் உள்ளனவா என்று அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும், சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, மாநில அரசின் அனுமதி இல்லாமல் கொல்கத்தா ஆணையரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து தங்களை பணி செய்யவிடாததை குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மேற்கு வங்க ஆளுநரிடம் முறையிடவும் சிபிஐ நேரம் கேட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இச்சம்பவம் குறித்து மேற்கு வங்க காவல்துறை தலைவரிடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.