காஷ்மீர் தற்கொலை தாக்குதலுக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை: சொல்கிறது பாகிஸ்தான்

ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் நடந்த இந்த தாக்குதலுக்கு பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத
காஷ்மீர் தற்கொலை தாக்குதலுக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை: சொல்கிறது பாகிஸ்தான்
Published on
Updated on
1 min read


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 44 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. 

ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து, பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.

இந்தக் கொடிய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் நடந்த இந்த தாக்குதலுக்கு பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது பொறுப்பேற்பதாக ஜிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. 

பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் கவலை அளிக்கிறது. 

உலகின் எந்த பகுதியிலும் வன்முறை நடைபெற்றாலும் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலுக்கு விசாரணை நடத்தாமலே எங்கள் மீது பழி போடும் இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களின் கருத்துக்களை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசாருக்கு பாகிஸ்தானே அதன் மண்ணில் செயல்படவும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பதை நிறுத்தி, பயங்கரவாத உள்கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com