எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை குறைக்க வேண்டும்: நிதியமைச்சகம்

பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 52 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய

Updated On :15 ஜனவரி 2019, 1:27 am IST


பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 52 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. தற்போது சில பொதுத் துறை வங்கிகளில் 75 சதவீதத்துக்கு மேல் அரசின் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் இப்போது மத்திய அரசின் பங்கு 58.53 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், இதனை மேலும் குறைக்கும் வகையில் பங்கு விற்பனை மூலம் ரூ.20,000 கோடியை திரட்ட அந்த வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அந்த வங்கியில் அரசின் பங்கு வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளில் மத்திய அரசின் பங்கை குறைப்பது குறித்து நிதித்துறை செயலர் ராஜீவ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
பொதுத் துறை வங்கிகளில் அரசிடம் பெரும்பான்மையான பங்குகள் இருக்க வேண்டும் என்பது அவசியமானதுதான். அதே நேரத்தில் சர்வதேச பெரு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் போல நமது வங்கிகளின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்க வேண்டும். இதற்காக வங்கிகள் தங்களிடம் உள்ள அரசின் பங்கை 52 சதவீதம் என்ற அளவுக்காக குறைக்க வேண்டும். சந்தையின் போக்கு சாதமாக இருக்கும் பட்சத்தில் பொதுத் துறை வங்கிகளின் அரசின் பங்கை மேலும் குறைத்துச் செல்லலாம். இதன் மூலம் வங்கிகளின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்.
சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் உள்ளிட்ட வங்கிகள் ஏற்கெனவே, தங்கள் பணியாளர்களிடம் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கிவிட்டன. கிராமப் புறங்களில் வங்கிச் சேவையில் உள்ள பிராந்திய கிராம வங்கிகளை ஒருங்கிணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு சிறப்பான வங்கி சேவை கிடைக்கும் என்றார்.
பிராந்திய கிராமப்புற வங்கிகளில் மத்திய அரசின் பங்கு இப்போது 50 சதவீதமாக உள்ளது. 35 சதவீத பங்கு அந்த வங்கிக்கு துணையாக உள்ள பொதுத் துறை வங்கியிடமும், 15 சதவீத பங்கு அந்த வங்கி அமைந்துள்ள மாநில அரசிடமும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.