ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வெளியிடப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் சார்பில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது ரஃபேல் ஒப்பந்தம் குறித்த முடிவு குறித்து சந்தேகப்பட எதுவும் இல்லை என்று தெரிவித்து, மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் சார்பில் வழக்குரைஞர்கள் தீரஜ் குமார் சிங், மிருணாள் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு விமான விலை தொடர்பாக தவறான தகவலை பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய அரசும் அளித்துள்ளன. இதுதொடர்பான ஆவணத்தை மனுதாரர்களுக்கு அளிக்கவில்லை. இது நீதித்துறை கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். இந்த பொய்யான தகவலின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. ஆதலால், ரஃபேல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சீராய்வு செய்ய வேண்டும். இந்த ரஃபேல் விவகாரம் அளித்தோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









