

திருவனந்தபுரம்: தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை கேரளத்தில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் தென் மேற்குப் பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும்.
பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான அடுத்த விஷயமே கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் செய்தியாக அமைந்துவிட்டது.
கேரளாவின் திரிசூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 10ம் தேதி முதல் 11ம் தேதி வரை கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை இவ்விரண்டு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திரிசூரில் ஜூன் 10ம் தேதியும், மற்ற 3 மாவட்டங்களில் ஜூன் 11ம் தேதியும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூன் 9ம் தேதி ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கால கட்டத்தில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும். தமிழகத்தை பொருத்தவரை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட காற்று வீசும். நிகழாண்டில் தென் மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பருவமழை சற்று தாமதமாகிவந்தது.
கேரளத்தில் தொடங்குகிறது: இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை (ஜூன் 8) கேரளத்தில் தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்குப் பருவமழை தற்போது மாலத்தீவுகள், குமரிக்கடலில் பெரும்பாலான பகுதிகள், தெற்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில் படிப்படியாக அதிகரித்துள்ளது. தெற்கு அரபிக்கடலில் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை வலுத்து வருகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் பருவமழை காணப்படுகிறது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இது போன்ற காரணிகளால், தென்மேற்கு பருவமழை கேரளத்தில் சனிக்கிழமை (ஜூன் 8) முதல் தொடங்க சாதகமான சூழல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 8) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றுவீசும்.
ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலையை பொருத்தவரை 100 டிகிரி வரை காணப்பட வாய்ப்பு உள்ளது.
8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 107 டிகிரி பதிவானது.
வேலூரில் 106 டிகிரி, பாளையங்கோட்டை, திருச்சியில் தலா 104 டிகிரி, கரூர் பரமத்தியில் 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பரங்கிபேட்டை, சேலத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, சிவலோகம், களியலில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.