இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்

பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்


பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்திய விமானப் படையினர் கடந்த செவ்வாய்கிழமை எல்லை கட்டுப்பாட்டை கடந்து சென்று குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதன்கிழமை காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய விமானப் படை எதிர்கொண்டதால் பாகிஸ்தான் போர் விமானத்தின் தாக்குதல் இந்தியாவில் எந்தவித பொருள் சேதத்தையோ, உயிர் சேதத்தையோ ஏற்படுத்தவில்லை. 

ஆனால், இந்த போர் விமான சண்டையில் இந்தியாவின் மிக் 21 ரக விமானம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேசமயம், இந்திய விமானம் மீதும் பாகிஸ்தான் விமானம் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம், இந்தியாவும் ஒரு போர் விமானத்தை இழந்தது. 

அந்த விமானத்தை இயக்கிய இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிக்க முயன்று பாகிஸ்தானில் தரையிறங்கினார். 

இதையடுத்து, தங்கள் வசம் 2 இந்திய விமானிகள் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்திய அரசு முதற்கட்டமாக தெரிவிக்கையில், இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் காணாமல் போனது உறுதியாகியுள்ளது, அது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றது. அபிநந்தன் பாகிஸ்தான் வசம் தான் இருக்கிறார் என்பதை அப்போது உறுதி செய்யவில்லை. 

ஆனால், அடுத்த சில நேரத்தில், இந்திய விமானி அபிநந்தன் தங்கள் வசம் இருக்கும் விடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது.  

இதைத்தொடர்ந்து, இந்திய விமானி அபிநந்தன் எந்தவித துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படாமல், நிபந்தனையின்றி, உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், "பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்பதன் அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தனை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுகிறார்" என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை அறிவித்தார்.

இதையடுத்து, இந்திய விமானி அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தெரிவித்தார். 

அதன்படி, அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர், லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.  

இதனிடையே, வாகா எல்லையில் வழக்கமாக நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்பட்டது. எனினும், அபிநந்தனின் வருகையையொட்டி அங்கு வழக்கம் போல் மக்கள் திரண்டிருந்தனர்.   

இதையடுத்து, அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com