
ஜேப்பூர்: விண்வெளியிலும் நாங்கள் சவ்கிதாரை (காவலாளியை) உருவாக்கியுள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம், கோரபுட் மாவட்டம், ஜேப்பூரில் வெள்ளியன்று நடந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஆதரவு, மக்களின் ஆதரவும், ஆசியும் எங்களுக்குத் தேவை.
கடந்த 5 ஆண்டுகளாக, எங்களுடைய அரசு , 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது, 3 ஆயிரம் வீடுகளுக்கு மின்வசதியும, 40 லட்சம் வீடுகளுக்கு சமையல் கேஸ் வசதியும் அளித்துள்ளது.
விண்வெளியில் கூட நமது செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க நாங்கள் காவலாளியை (சவ்கிதார்) உருவாக்கி இருக்கிறோம். நமது செயற்கைக்கோள்களின் பாதுகாப்புக்கு என மிஷன் சக்தி சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
ஆனால், விண்வெளியில் நாம் படைத்துள்ள சாதனையை எதிர்க்கட்சிகள் இழிவாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் தகுந்த பதிலை நீங்கள் அளிக்க வேண்டும். உறுதியான முடிவுகளை அரசு எடுப்பதற்கு பெரும்பான்மை அரசு தேவை. உங்களுக்கு வலிமையான அரசு வேண்டுமா அல்லது உதவி செய்ய இயலாத அரசு வேண்டுமா என்பதைப் பார்த்து நீங்கள் வாக்களியுங்கள்.
பாகிஸ்தானின் பாலகோட்டில் நமது விமானப்படை நடத்திய தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அரசோ தீவிரவாதிகளின் உடல்களை இன்னும் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.