ஹிந்து பயங்கரவாதம் என்பதே கிடையாது. ஹிந்துக்களால் இந்தியாவில் மதசார்ப்பின்மை காக்கப்படுவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹிந்து பயங்கரவாதம் என்பதே கிடையாது. ஹிந்துத்துவத்தையும், பயங்கரவாதத்தையும் இணைத்து பேசியதன் மூலம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியும் உள்ளிட்டவற்றை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்தியுள்ளது. எனவே அதற்காக அவர்கள் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாகிஸ்தானில் தான் மதசார்ப்பின்மை என்பதே கிடையாது. ஆனால், ஹிந்துக்களால் தான் இந்தியாவில் மதசார்ப்பின்மை காக்கப்படுகிறது. எதிர்கட்சிகளால் முன்வைக்கப்படும் ஹிந்து பயங்கரவாதம் என்பதற்கு தக்க பதிலடி அளிக்கும் விதமாக தான் சாத்விக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.
ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையை இந்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், காங்கிரஸ் கட்சி அவரை கொடுமைப்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளை தண்டிப்பதற்கு பதிலாக அப்பாவிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி தாக்கும். இவை அனைத்துக்கும் விரைவில் தக்க பதில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.