மகாராஷ்டிராவின் அரசியல் நாடகங்களுக்கு உத்தவ் தாக்கரேவின் முதல்வர் கனவுதான் காரணமா?

மகாராஷ்டிராவில் நடைபெறும் அனைத்து அரசியல் நாடகங்களுக்கும் காரணம், சிவ சேனைக்கு ஆட்சி மீதான ஆசையும், உத்தவ் தாக்கரேவின் முதல்வர் கனவும்தான் என்று கூறப்படுகிறது.
Maharashtra drama
Maharashtra drama


மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெறும் அனைத்து அரசியல் நாடகங்களுக்கும் காரணம், சிவ சேனைக்கு ஆட்சி மீதான ஆசையும், உத்தவ் தாக்கரேவின் முதல்வர் கனவும்தான் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனைக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சரத் பவார், சோனியா காந்தி ஆகிய இருவருடனும் பேச்சு நடத்திய பிறகும், அக்கட்சிகளிடம் இருந்து உறுதியான பதிலையோ, ஆதரவுக் கடிதங்களையோ சிவசேனையால் பெற முடியவில்லை. ஆளுநர் அளித்த கால அவகாசமும் நிறைவடைய இருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் ஆதித்ய தாக்கரே தலைமையில் அக்கட்சி குழுவினர் ஆளுநரைச் சந்தித்தனர்.

அதே சமயம், உத்தவ் தாக்கரே வீட்டு வாசலில் குவிந்த சிவசேனை தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால், பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தர மறுத்தார். இதனால், சிவசேனையின் முதல்வர் கனவு காற்றோடு கரைந்தது. அதே சமயம், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே என்று சில இடங்களில் சிவ சேனை சார்பில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

முன்பெல்லாம் தனக்காக எதையுமே பாலாசாஹேப் கேட்டதே இல்லை. ஆனால் எல்லோமே அவரைத் தேடி வந்தது. ஆனால், தற்போது சொந்த லட்சியம் பெரிதாக மாறிவிட்டது. இதுவே அனைத்து அரசியல் நாடகங்களுக்கும் காரணமாகியுள்ளது என்று அக்கட்சியின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை நாங்கள் முற்றிலும் தவறாகக் கணித்திருந்தோம். காங்கிரஸ் மற்றும் என்சிபியின் நோக்கத்தையும் நாங்கள் தவறாகவே புரிந்து கொண்டோம், கடந்த வாரம் இதையேதான் பாஜகவிடமும் நடந்தது என்று கூறுகிறார் மற்றொருவர்.

2014ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜகவுடனான கூட்டணி முறிந்த போது உத்தவ் கடும் அதிருப்தி அடைந்தார். சிவ சேனையின் பொன்னான வாய்ப்பை பாஜக பறித்து விட்டதாக பல முறைக் கூறினார். 

பொதுவெளியிலேயே, மகாராஷ்டிர முதல்வர் பதவியில் சிவ சேனை தலைவர் அமர்வதை பார்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். உத்தவின் தனிநபர் லட்சியமே இன்று அனைத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com