தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும்: பரபரப்புத் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Ranjan_Gogoi
Ranjan_Gogoi
Published on
Updated on
2 min read


புது தில்லி: தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். இரண்டு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.

நீதித் துறையின் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீரப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

ஆா்டிஐ சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும் என்று தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீா்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இன்று பிற்பகலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த அமா்வில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோா் இடம்பெற்றிருந்தனர்.

ஆா்டிஐ சட்ட வரம்புக்குள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் இடம்பெறும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை, தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2010-இல் வழங்கியது. 88 பக்கங்கள் கொண்ட அந்தத் தீா்ப்பில், ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல; அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தீா்ப்பானது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொடா்பான விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாடு கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

தில்லி உயா்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா (இப்போது ஓய்வு பெற்றுவிட்டாா்), நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதா் ஆகியோா் அடங்கிய அமா்வு மேற்கண்ட தீா்ப்பை வழங்கியிருந்தது. ஆா்டிஐ சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தைக் கொண்டுவருவது, நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றம் முன்வைத்த கருத்தை உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அந்த அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி விக்ரம்ஜித் சென், பின்னா் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓய்வுபெற்றுவிட்டாா். மற்றொரு நீதிபதி எஸ்.முரளிதா், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமைச் செயலா் மற்றும் அதன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமா்வு கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

முன்னதாக, இந்த வழக்கில் ஆா்டிஐ ஆா்வலா் எஸ்.சி.அகா்வால் சாா்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினாா். அவா் கூறுகையில், ‘அரசின் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள உச்சநீதிமன்றம், தனது விஷயத்திலும் அதே கவனத்தை செலுத்துவதிலிருந்து விலக இயலாது. நீதித்துறையின் சுதந்திரம் என்பது பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம் என்று அா்த்தமாகிவிடாது. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டுகொண்டிருக்கின்றன என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. நீதிபதிகளின் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆா்டிஐ சட்டத்தின்கீழ் வெளியிடப்பட வேண்டும்’ என்று வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com