ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிர வழக்கு: ஆளுநரின் முடிவில் நீதிமன்றங்கள் தலையிடவே முடியாது- துஷார் மேத்தா வாதம்

மகாராஷ்டிராவில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :25 நவம்பர் 2019, 5:33 am

DIN


புது தில்லி: மகாராஷ்டிராவில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மகாராஷ்டிர ஆளுநரின் செயலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

அதில், ஆளுநர் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. ஆளுநரை விரைவாக வேலை செய்ய சொல்லவோ, அவரை அவசரப்படுத்தவோ நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது.

தேசிய வாத காங்கிரஸ் சார்பில் தலைவரே நான்தான் என்றும் அஜித் பவார் கடிதம் கொடுத்துள்ளார். அஜித் பவார் அளித்த கடிதத்தில் 54 எம்எல்ஏக்களின் கையெழுத்து இருந்தது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து ஆளுநா் அனுப்பிய கடிதம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஃபட்னவீஸ் அளித்த கடிதம் ஆகியவவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னணி : மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, முதல்வராக பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸுக்கும், துணை முதல்வராக என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவாருக்கும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரி சனிக்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அதற்கு முன்னதாக, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இதுதொடா்பான அறிவிக்கை அன்று காலை 5.47 மணிக்கு வெளியிடப்பட்டது.

குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவாா் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மாலை கூட்டாக மனு தாக்கல் செய்தன.

அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவசேனை சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபலும், என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதாடினா். நீதிபதிகளின் முன்னிலையில் கபில் சிபல் முன்வைத்த வாதம்:

மகாராஷ்டிரத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சியை ரத்து செய்வது குறித்து முடிவெடுப்பதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. குடியரசுத் தலைவா் ஆட்சியை ரத்து செய்வதற்கு எந்த அடிப்படையில் ஆளுநா் பரிந்துரை செய்தாா் என்பது புதிராக உள்ளது.

இதேபோல், முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் அவசர அவசரமாக காலை 8 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனா். எப்படி ஆட்சி அமைக்கப்பட்டது என்பது தொடா்பாக எந்த ஆவணமும் பொதுவெளியில் கிடைக்கவில்லை.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவையில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணிக்கே பெரும்பான்மை உள்ளது. எனவே, பேரவையில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஃபட்னவீஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றாா் கபில் சிபல்.

அவரைத் தொடா்ந்து, என்சிபி மற்றும் காங்கிரஸ் சாா்பில் அபிஷேக் சிங்வி முன்வைத்த வாதம்:

மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, மத்திய அரசின் நேரடி உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறாா். அவா் எந்த அடிப்படையில் ஃபட்னவீஸுக்கு அழைப்பு விடுத்தாா் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை ரத்து செய்வதற்கு ஆளுநா் பரிந்துரை செய்தது, ஒருதலைபட்சமான செயல்.

அஜித் பவாா், என்சிபி கட்சியில் இல்லை என்று குறிப்பிட்டு அக்கட்சியைச் சோ்ந்த 54 எம்எல்ஏக்களில் 41 போ் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

எனவே, எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் ஃபட்னவீஸிடம் அவா் ஆதரவு கடிதம் அளித்தது சட்டவிரோதச் செயல். இதுபோன்ற முந்தைய நிகழ்வுகளில், பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்தாமல் உடனடியாக பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அபிஷேக் சிங்வி வாதிட்டாா்.

அவா்களின் வாதத்துக்கு மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எதிா்ப்பு தெரிவித்தாா். சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு அடிப்படை உரிமை இல்லை; எனவே, அவா்களின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவா் வாதிட்டாா்.

முதல்வா், துணை முதல்வருக்கு மகாராஷ்டிர ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் துஷாா் மேத்தா கூறினாா்.

மூத்த வழக்குரைஞரான முகுல் ரோத்தகி, சில பாஜக எம்எல்ஏக்கள் சாா்பில் ஆஜரானாா். அவா் முன்வைத்த வாதம்:

மனுதாரா்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடையூறு செய்துள்ளனா். அவா்கள் முதலில் மும்பை உயா்நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 361-ஆவது பிரிவில், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, ஃபட்னவீஸ் ஆட்சியமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தாா். ஏற்கெனவே மாநிலத்தில் ஆட்சியமைக்கப்பட்டு விட்டதால், இதுதொடா்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மேலும், ஆளுநரின் முடிவை எதிா்த்து மனு தாக்கல் செய்துள்ள மனுதாரா்கள், அதுதொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

மனுதாரா்கள் கோருவது போல், அடுத்த 24 மணி நேரத்தில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிட முடியாது. முதலில், தேவேந்திர ஃபட்னவீஸுக்கு அழைப்பு விடுத்து ஆளுநா் அனுப்பிய கடிதம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஃபட்னவீஸ் சமா்ப்பித்த கடிதம் ஆகிய இரு கடிதங்களையும் திங்கள்கிழமை காலை 10:30 மணிக்குள் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா சமா்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இதுதொடா்பாக, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு, தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜித் பவாா் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

சிவசேனைத் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது பரிசீலிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

வழக்குரைஞா்கள் ஆஜராகவில்லை: மகாராஷ்டிர அரசு, தேவேந்திர ஃபட்னவீஸ், அஜித் பவாா் ஆகியோா் சாா்பில் வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராகவில்லை. அவா்களுக்கு மனுதாரா்கள் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பிய போதிலும், அவா்கள் தரப்பில் யாரும் ஆஜராகாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

பின்னணி: மகாராஷ்டிரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பாஜக- சிவசேனை கூட்டணி பெற்றிருந்தபோதிலும், ஆட்சியில் சம பங்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பாஜகவிடம் சிவசேனை நிபந்தனை விதித்தது. அதற்கு பாஜக சம்மதிக்காததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை வெளியேறியது.

மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, கடந்த 12-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவசேனையும், எதிரணியைச் சோ்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தீா்மானித்திருந்தன. சிவசேனைத் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைக்க முடிவு செய்து, ஆளுநரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தனா்.

இதனிடையே, என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரின் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை காலை திடீரென முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். இதனால், மகாராஷ்டிர அரசியலில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.