48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம்: விசாரணையின்றி கைது செய்ய தடையில்லை

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாகக் கடந்த ஆண்டு பிறப்பித்திருந்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. 

News image
Updated On :1 அக்டோபர் 2019, 10:51 pm

 முந்தைய உத்தரவுகளைத் திரும்பப் பெற்றது உச்சநீதிமன்றம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாகக் கடந்த ஆண்டு பிறப்பித்திருந்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. 
இதன் மூலம், இச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படும் நபர்களைக் காவல் துறையினர் விசாரணை ஏதுமின்றி கைது செய்ய முடியும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், குற்றம்சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்யவும், கைதாகும் நபர்கள் ஜாமீன் பெற முடியாத வகையிலும் விதிகள் இடம்பெற்றிருந்தன. 
இந்நிலையில், இச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படும் நபர்களை எந்தவித விசாரணையுமின்றி கைது செய்வதற்குத் தடை விதித்தும், அச்சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்கள் ஜாமீன் பெறும் வகையிலும் சட்டத்தின் விதிகளைத் திருத்தி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. 
பழிவாங்கும் நோக்கில் இந்தச் சட்டத்தை சிலர் பயன்படுத்துவது இந்த உத்தரவு மூலம் தடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
எனினும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான அமைப்புகள் இந்த உத்தரவைக் கண்டு வெகுண்டெழுந்தன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுவின் விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 13-ஆம் தேதி மாற்றியிருந்தது. இந்நிலையில், இந்த விசாரணையின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை வழங்கியது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தீண்டாமை ஒழியவில்லை: அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரைப் பாரபட்சமாக நடத்துவதிலிருந்து பாதுகாக்கிறது. 
இருந்தபோதிலும், அவர்கள் இன்னமும் சமூகத்தில் பாரபட்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தீண்டாமைக் கொடுமைகளையும், சமூக நடவடிக்கைகளிலிருந்து ஓரங்கட்டப்படுதலையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், அச்சட்டத்தின் கீழ் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் ஜாதி அமைப்பால் ஏற்படுபவை அல்ல; மனிதத்தின் தோல்வியால் ஏற்படுபவை. அச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்வதற்குத் தடை விதித்தும், அவர்கள் ஜாமீன் பெறும் வகையிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் திரும்பப் பெறப்படுகின்றன.
அவசியம் ஏதுமில்லை: இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்திருக்க வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்க அரசமைப்புச் சட்டத்திலும் இடமில்லை. இவ்வாறான உத்தரவுகளைப் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படவில்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும், அது நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், குற்றம்சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்யவும், அவர்கள் ஜாமீன் பெற முடியாத வகையிலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்தப்  புதிய சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.