சபரிமலை கோயில் அரவணை பிரசாதத்துக்கு காப்புரிமை கோர முடிவு

சபரிமலை கோயில் அரவணை பிரசாதத்துக்கு காப்புரிமை கோர முடிவு

சபரிமலை கோயில் அரவணை உள்பட கேரளத்தில் உள்ள பிரபலமான கோயில்களின் பிரசாதங்களுக்கு காப்புரிமை பெற திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.


சபரிமலை கோயில் அரவணை உள்பட கேரளத்தில் உள்ள பிரபலமான கோயில்களின் பிரசாதங்களுக்கு காப்புரிமை பெற திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.
கேரளத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களைப் போல் சிலர் போலியாகத் தயாரித்து வழங்குவதாக பக்தர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து வரலாற்றிலேயே முதன் முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலின் அரவணை, அம்புலப்புழை கிருஷ்ணர் கோயில் பால் பாயசம், கொட்டாரக்கரா கணபதி கோயிலின் உண்ணியப்பம் போன்ற பிரசாதங்களுக்கு காப்புரிமை கோர திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கோயில்களை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமே நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காப்புரிமை பெறுவதன் மூலம் மற்ற யாரும் அதே பெயரில் இந்த பிரசாதங்களை விற்பனை செய்ய முடியாது. தேவஸ்வம் வாரியத்தின் கோரிக்கை நிறைவேறும்பட்சத்தில், புவிசார் குறியீடு சட்டத்தின்படி அரவணை, பால் பாயசம், உண்ணியப்பம் ஆகியவற்றுக்கு காப்புரிமை கிடைக்கும். பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்படும் இந்தப் பிரசாதங்கள் அனைத்தும் அவற்றின் தனிச்சுவைக்காக பெயர் பெற்றவை.
இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் ஏ.பத்மகுமார் கூறியதாவது:
அண்மைக் காலமாக பிரபலமான கோயில் பிரசாதங்களைப் போன்றே போலி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதை எங்களுக்கு நிறைய புகார்கள் வந்தன. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நாங்கள் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த மாதத் தொடக்கத்தில் அம்பலப்புழா பால் பாயசம் என்ற பெயரில் சீலிட்ட பெட்டிகளில் பாயசத்தை விற்பனை செய்தது தொடர்பாக பேக்கரி ஒன்றின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அம்பலப்புழை பால் பாயசம் மட்டுமின்றி வேறு சில பிரபலமான கோயில் பிரசாதங்களுக்கும் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் போல் சிலர் போலியாகத் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அவற்றுக்கு காப்புரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓர் அறிக்கையைத் தயாரிப்பதற்கும், காப்புரிமை கோரி விண்ணப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காப்புரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை ஆராயுமாறு சட்ட அதிகாரியை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள தேவஸ்வம் வாரியத்தின் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம் என்றார் அவர்.
கேரளத்தில் சபரிமலை ஐயப்பின் கோயில் உள்பட 1,200 கோயில்களை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகித்து வருகிறது.
தமிழ்நாட்டின் பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்துக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுக்கும் புவிசார் குறியீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com