
இதுதான் உலகின் மிகக் காஸ்ட்லியான தேர்தல். இந்த தேர்தலுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்பட உள்ளது.
சுமார் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தொடங்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக நடைபெறும் இந்த தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களித்து அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்தன. காலை முதலே ஏராளமான ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பதைக் காண முடிகிறது.
முதல் கட்ட தேர்தலில், ஆந்திரப் பிரதேசம்(25), அருணாசலப் பிரதேசம்(2), மேகாலயம்(2), மிஸோரம், நாகாலாந்து(1), சிக்கிம்(1), அந்தமான்-நிகோபர் தீவுகள்(1), தெலங்கானா (17), உத்தரகண்ட் (5) என 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இதுதவிர, உத்தரப் பிரதேசம்(8), மேற்கு வங்கம் (2), பிகார்(4) ஆகிய மாநிலங்களிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜம்மு, பாரமுல்லா ஆகிய தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இன்றைய வாக்குப்பதிவில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,279. இவர்களது தலையெழுத்தை 14 கோடியே 20 லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்வதன் மூலம் நிர்ணயிக்க உள்ளனர். இவர்களில் 7,764 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 3957 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 20 மாநிலங்களில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதேவேளையில், பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.
இவர்களது பிரசாரம் கைகொடுக்குமா? அல்லது மாநிலப் பிரச்னைகளை அரசுகள் எவ்வாறு கையாண்டன என்பதை வைத்து மக்கள் வாக்களிக்கப் போகிறார்களா? மே 23ம் தேதி பார்க்கலாம்.