திருப்பி அனுப்பப்பட்ட நிலையிலும், காஷ்மீரின் சூழலை தெரிந்துகொண்ட ராகுல் காந்தி! 

ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லிக்குத் திரும்பிய ராகுல் காந்தி இருந்த விமானத்தில் காஷ்மீரியப் பெண் ஒருவர், அவரிடம் அம்மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து எடுத்துரைத்தார்.
திருப்பி அனுப்பப்பட்ட நிலையிலும், காஷ்மீரின் சூழலை தெரிந்துகொண்ட ராகுல் காந்தி! 

ஜம்மு காஷ்மீரில் இருந்து தில்லிக்குத் திரும்பிய ராகுல் காந்தி இருந்த விமானத்தில் காஷ்மீரியப் பெண் ஒருவர், அம்மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து ராகுலிடம் எடுத்துரைத்தார். 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அன்றைய தினம் முதல் காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. 

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை அந்த மாநிலத்துக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். 

தில்லியிலிருந்து சனிக்கிழமை பிற்பகலில் ஸ்ரீநகருக்கு புறப்பட்ட 12 பேர் கொண்ட அந்தக் குழுவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இருந்தனர்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆஸாத், திருச்சி சிவா, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ், மனோஜ் ஜா, மஜீத் மேமன் உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை. 

காஷ்மீர் ஆளுநர் அழைப்பின் பேரிலேயே தாங்கள் வந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு தெரிவித்தபோதிலும், மாநில அரசு நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுத்தது. அத்துடன், ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து அவர்கள் மீண்டும் தில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வந்த போது, விமானத்தில் இருந்த காஷ்மீரியப் பெண் ஒருவர் ராகுலிடம் வந்து காஷ்மீர் நிலை குறித்துப் பேசியுள்ளார்.

அவர், 'என்னுடைய குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் உள்ளனர். என்னுடைய சகோதரர் இருதய நோயாளி. கடந்த 10 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை பார்க்க முடியாத சூழல் தான் காஷ்மீரில் நிலவுகிறது. நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த விடியோவை காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராதிகா கேரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com