தமிழக மாணவர்கள் குறித்து அப்படி நான் பேசவே இல்லை: நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு 

தமிழக மாணவர்கள் குறித்து அப்படியொரு கருத்தை நான் தெரிவிக்கவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்கள் குறித்து அப்படி நான் பேசவே இல்லை: நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு 

சென்னை: தமிழக மாணவர்கள் குறித்து அப்படியொரு கருத்தை நான் தெரிவிக்கவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளார். இவருக்கு, ஆம் ஆத்மி அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தில்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தில்லி வந்துள்ள பிரகாஷ் ராஜ், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நாட்டில் பிரிவினையும், வெறுப்பு அரசியலும் தலைவிரித்தாடும் வேளையில், ஜனநாயகத்தைக் காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும். தில்லியில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் ஆம் ஆத்மி அரசு கொண்டுவந்த மாற்றங்கள் என்னைக் கவர்ந்துள்ளன. நான் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் அல்ல. ஆனால், அக்கட்சி தில்லியில் செய்த மக்கள் நலப் பணிகளால் கவரப்பட்டுள்ளேன். தில்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ஒருவாரம் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். 

தமிழ் மாணவர்கள்: தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சேர்வதால், தில்லி மாணவர்களுக்கு வாய்புகள் குறைவதாக கேஜரிவால் சொல்வதில் என்ன தவறுள்ளது? தில்லி மாணவர்களின் வாய்ப்புகள் தமிழ் மாணவர்களால் தட்டிப் பறிக்கப்படுவது உண்மைதான். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஒரு தமிழன் இப்படிப் பேசலாமா என்று கேட்கிறீர்கள். நான் தமிழன் அல்ல. கன்னடன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடிக்கிறேன் என்றார் அவர். 

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொலைபேசி மூலமாக ஆடியோ பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதில், " தில்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 500 தமிழ் மாணவர்கள் சேர்வதால், தில்லி மாணவர்களுக்கான வாய்ப்பு குறைகிறது' என கேஜரிவால் பேசுவதாக அந்தப் பதிவு உள்ளது. 

இந்த ஆடியோ பிரசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக மாணவர்கள் குறித்து அப்படியொரு கருத்தை நான் தெரிவிக்கவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

தமிழக மாணவர்களால்தான் தில்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவது உணமை தான் என நான் கூறவில்லை.

தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.  தரம் தாழ்ந்து, எனது கருத்துக்களை திரித்து வெளியிட்டோரை நினைத்து வெட்கப்படுகிறேன். எனது கருத்து வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com