மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை: மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை தாக்கல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி

மும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால், தங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை என்று அக்கட்சி ஆளுநரிடம் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து, இரண்டாவது பெரிய கட்சியாக திகழும் சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக முடிவெடுக்க திங்கள்கிழமை இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்தார். ஆனால் பாஜவுடனான கூட்டணியைத் துண்டித்தும், அக்கட்சியாலும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து தேவையான ஆதரவை உரிய நேரத்தில் பெற இயலவில்லை. அதேசமயம் அக்கட்சி கேட்ட இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசத்தையும் ஆளுநர் வழங்க மறுத்து விட்டார் 

அதையடுத்து ஆட்சியமைக்க சிவசேனை கேட்ட கூடுதல் அவகாசம் மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை திங்கள் இரவு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

புதிய திருப்பமாக ஆட்சியமைக்க ஆளுநர் குறைந்த அவகாசமே வழங்கினார் என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய் மதியம் சிவசேனை மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவரது அறிக்கையில் மஹாராஷ்டிராவில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், எனவே அரசியல் சாசனப் பிரிவு 356-ன் படி அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநர் பரிந்துரையை அடுத்து, புது தில்லியில் செவ்வாயன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவையும் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com