ஐந்தே நிமிடங்களில் பணியை முடித்துவிட்ட ரஞ்சன் கோகோய்! கடைசி நாளன்று செய்ய விரும்பும் ஒரு விஷயம்?

உச்ச நீதிமன்றத்துக்கு இன்று ஒரு வழக்கமான பணி நாளாக இருந்தாலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகத்துக்கு இது ஒரு சாதாரண நாள் அல்ல.
CJI Ranjan Gogoi
CJI Ranjan Gogoi

புது தில்லி: உச்ச நீதிமன்றத்துக்கு இன்று ஒரு வழக்கமான பணி நாளாக இருந்தாலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகத்துக்கு இது ஒரு சாதாரண நாள் அல்ல.

ஆம், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு இன்று கடைசி பணி நாள். அவர் இன்று காலை உச்ச நீதிமன்றத்துக்கு வந்து 5 நிமிடங்களில் பணிகளை முடித்துக் கொண்டார்.

நவம்பர் 17ம் தேதி தான் ரஞ்சன் கோகோய் அதிகாரப்பூர்வமாக பணி ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், சனி, ஞாயிறு என்பதால் இன்றுதான் அவரது கடைசி பணிநாள்.

இன்று அவர் தனது பணியை காலை 10.30 மணிக்கு தொடங்கினார். அவர் தலைமையிலான அமர்வு முன்பு 10 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அந்த அமர்வில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ். போப்டேவும் இடம்பெற்றிருந்தார்.

அனைத்து வழக்குகளையும் மிக விரைவாக விசாரித்த நீதிபதிகள் அமர்வு, நோட்டீஸ் பிறப்பிக்க, தடை விதிக்க என பரபரப்பாக 10 வழக்குகளையும் 5 நிமிடங்களில் விசாரித்து முடித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தான் பதவியேற்றுக் கொள்ளும் முன், அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தற்போது பணி ஓய்வு பெறும் போதும், அங்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் இன்று பிற்பகலில் அவர் ராஜ்காட் செல்வார் என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரஞ்சன் கோகோய் இன்று மாலை காணொலி காட்சி மூலம் இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற, விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே உரையாற்ற உள்ளார். இதுதால் அவரது முதல் காணொலி உரையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com