ஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படும் ப.சிதம்பரம். 
தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படும் ப.சிதம்பரம். 


புது தில்லி: ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது செப்டம்பர் 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே அதில் தலையிட விரும்பவில்லை. எனவே முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

மேலும் விசாரணை அமைப்புகளுக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தற்போது சிபிஐ காவலில் இருக்கும் ப. சிதம்பரத்தை அடுத்து அமலாக்கத் துறை கைது செய்ய உள்ளது.

முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் போது கருத்தினை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி: 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 

இந்த வழக்கில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக, ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை நிராகரித்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரியது தொடர்பாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை, வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
சாட்சியங்கள் அழிக்கப்படக் கூடும்: அமலாக்கத் துறையினர் மனுதாரரிடம் (ப.சிதம்பரம்) ஏற்கெனவே நடத்திய விசாரணைகளின் ஆவணங்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழலில் அதை வழங்கினால், இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழிக்க அது உதவக்கூடும். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவது, நாட்டு நலனுக்கும், சமுதாயத்துக்கும் எதிரானதாகும்.

அந்த வழக்குகளை விசாரித்து, சதியை அம்பலப்படுத்த அமலாக்கத் துறைக்கு முழு உரிமையும், கடமையும் உள்ளது. நிதி மோசடியில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. 

கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகும், மனுதாரர் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கு அமலாக்கத் துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கில் மனுதாரரைக் கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சேகரித்த ஆவணங்களும், விசாரணை அறிக்கைகளும் மூடி முத்திரையிட்ட உறையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றார் துஷார் மேத்தா.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாகத் தெரிவிக்க வேண்டிய முக்கியத் தகவல்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அமலாக்கத் துறை சமர்ப்பிக்கலாம். ஆனால், அந்த ஆவணங்களை ஆராய்வது குறித்து நாங்கள் முடிவெடுப்போம். மனுதாரர் முன்ஜாமீன் கோரிய விவகாரத்தில், அடுத்த மாதம் 5-ஆம் தேதி உத்தரவிடப்படும் என்று தெரிவித்தனர். ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டித்தும் அவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com