சிறப்புக் கட்டுரை: கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாத சோனியா! வலுவிழக்கிறதா காங்கிரஸ் கட்சி?

கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றும், இறுதி முடிவு எட்டப்படாததால் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் 10ல் பொறுப்பேற்றார்.
சிறப்புக் கட்டுரை: கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாத சோனியா! வலுவிழக்கிறதா காங்கிரஸ் கட்சி?

2019 ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. ஆனால், 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடந்தத் தேர்தலில் எதிர்பாராத அளவு தோல்வியை சந்தித்தது.

வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி என்ற முக்கிய அந்தஸ்தையே இழந்தது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

காங்கிரஸ் தேர்தல் தோல்விக்கு காரணம்? 

தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம், கட்சிப் பணிகள் என சிறப்பாகச் செய்தாலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதற்கான காரணம் இதுவரை தெளிவாக உணரப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால், இந்தத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். அவரையே தலைவராக தொடர வைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பலர் தொடர்ந்து முயற்சி செய்தனர். இறுதியில், அந்த முயற்சிகள் கூட தோல்வியைத் தான் சந்தித்தது. தலைவர் பதவியில் நீடிக்கப்போவதில்லை என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். 

தொடர்ச்சியாக, கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றும், இறுதி முடிவு எட்டப்படாததால் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் 10ல் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று, ஒரு மாதமான நிலையிலும், இம்மியளவு கூட கட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை என்பதே காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெரும் ஆதங்கமாக இருக்கிறது. 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியான நிலையில், தேர்தல் தோல்விகள் குறித்தோ அல்லது வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்தோ கட்சி எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. 

கட்சித்தலைவர் பதவி யாருக்கு?

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து இழுபறிநிலை நீடித்து வருகிறது. ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், அவர்களைத் தவிர வேறு யாரையாவது நியமிக்கும் பட்சத்தில் கட்சியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என்பது கட்சியின் ஒருபிரிவினரின் கருத்தாக இருக்கிறது.

மறுபக்கமோ, நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவரை தலைவராக நியமித்தால் மட்டுமே குடும்பக்கட்சி என்ற பெயரை நீக்க முடியும் என்றும் அதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமிக்கும் போது மக்களின் நன்மதிப்பை பெறமுடியும் என்பது மற்றொரு பிரிவினரின் ஆலோசனை.

ராகுல், பிரியங்கா இருவருமே தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், சோனியா என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பமான மனநிலையில் உள்ளாதாகவே கூறப்படுகிறது. 

சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், கமல் நாத், அசோக் கெலாட், ஆனந்த் சர்மா , இளம் தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் எனவும் அவ்வப்போது பேச்சு அடிபடுகிறது.

சரி, தலைவர் பதவி இழுபறி நிலை என்றால் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் மோதல் இருந்து வருகிறது. 

கமல் நாத் - சிந்தியா மோதல்:

2018ம் ஆண்டு  மத்தியப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு அக்கட்சியின் மூத்தத் தலைவர் கமல் நாத் மற்றும் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இருவரிடையே  போட்டி நிலவியது. இறுதியில் கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக உள்ளதால், இந்தப் பதவியாவது தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் சிந்தியா. 

ஆனால், பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கமல் நாத் கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அம்மாநிலத்தில் உள்ள மற்றொரு மூத்த தலைவர் திக் விஜய் சிங்கும் மாநிலத் தலைவர் பதவிக்கு அடிபோடுகிறார்.

மும்முனைப்போட்டியில், யாருக்கு பதவி வழங்குவது என்பது குறித்து சோனியா குழப்பத்தில் இருக்கிறார். கமல் நாத், சிந்தியா ஆகிய இருவரையும் தனித்தனியே அழைத்துப் பேச சோனியா திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல். 

தேர்தலில் ஆர்வம் காட்டாத காங்கிரஸ்!

இதுதவிர, இம்மாத இறுதியில் ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலுமே பாஜக & பாஜக கூட்டணி ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது காங்கிரஸ் கட்சிக்கு சவாலானதாகவே இருக்கும். வழக்கத்தை விட அதிகமாக திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், இதிலும் பெரிதாக காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. 

கண்டிப்பாக, இம்மாதிரியான சூழ்நிலைகளை அனைத்துக் கட்சித் தலைவர்களுமே எதிர்கொண்டிருப்பார்கள். இந்த நேரங்களில் எடுக்கும் முடிவுகள் தான் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்கிறதா? அல்லது மோசமான பாதைக்கு கொண்டு செல்கிறதா? என முடிவு செய்யும்.

முடிவுகள் முக்கியமானது; ஆனால், காலம் தாமதிக்காமல் அந்த முடிவுகளை எடுத்து செயல்படுத்துவது தான் கட்சிக்கு நல்லது. 

சோனியா காந்தி விரைவில் நல்ல முடிவு எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com